தகவல் - சம்மாந்துறை அன்சார்.
பௌத்த தேரர்கள் மற்றும் இந்து மதகுருமார்கள் அடங்கிய குழுவொன்று, சவூதி அரேபியாவிற்கு மத நிகழ்வு ஒன்றுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது சவுதிக்கு முதன் முதலாக விஜயம் மேற்கொண்ட பௌத்த தேரர்கள் மற்றும் இந்து மதகுருமார்கள் அடங்கிய குழு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மகாபோதி சங்கத்தின் தலைவரும், ஜப்பானுக்கான பிரதம சங்க நாயக்கருமான வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவொன்றும், இந்து சமய அறநிலையத்துறை குருக்கள் ராமச்சந்திர அய்யர் ஆகியோர் அடங்கிய குழுவினரே வருகை தந்துள்ளதாக சவுதியில் உள்ள இலங்கைத் துாதரகம் தெரிவித்துள்ளது.
முஸ்லீம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்களின் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸாவின் அழைப்பின் பேரிலேயே சவுதியில் இடம் பெறவிருந்த மாநாட்டில் பங்கேற்க துறவிகள் மற்றும் பாதிரியார்கள் சவுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து சென்ற பௌத்த மதகுருக்கள் அடங்கிய குழுவினர் ரியாத்தில் தங்கியிருந்த காலத்தில், மத சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு தொடர்பாக சவுதி வாழ் இலங்கையர்களுக்கு உரை நிகழ்த்தியிருந்தார். அத்தோடு இலங்கை ஒரு நெருக்கடியான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கும் இவ்வேளையில் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் குழுவினர் மே 13 ஆம் திகதி இலங்கை தூதரக வளாகத்தில் இலங்கை கலாசார மன்றம் ஏற்பாடு செய்திருந்த வெசாக் கொண்டாட்டத்தில் ரியாத்தில் உள்ள இலங்கை சமூகத்துடன் இணைந்து போதி பூஜை செய்ததோடு மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.