Ads Area

சஜித், ஏன் பதவியேற்க வில்லை? - முல்லை பிரதான அமைப்பாளர் லக்‌ஷயன் முத்துக்குமாரசாமி.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் என்ற முறையில் அதற்கான பதிலையும் விளக்கத்தையும் வழங்குவதற்கு நான் தலைப்பட்டுள்ளேன் என லக்‌ஷயன் முத்துக்குமாரசாமி  அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பதவி வெறிபிடித்து சஜித் மக்களுக்கு துரோகம் செய்ய எண்ணவில்லை, இதுவே என்னைப் பொறுத்தவரையில் சிறந்த தலைமைத்துவ பண்பு என்றும் ஆனால், ரணில் தனது நண்பர் மஹிந்தவின் குடும்பத்தைக் காப்பாற்றவே எந்தவித நிபந்தனையும் இல்லாமல் களம் இறங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, வாழ்வாதாரச் செலவுகளின் திடீர் உயர்வு, உரத்தின் தட்டுப்பாடு மற்றும் டொலர் இருப்புப் பிரச்சினை என பொருளாதாரத்தை சீரழித்த கோட்டபாய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் gota go home (கோட்டா கோ கிராமம்) மற்றும் go home rajapaksha (வீட்டுக்கு போ ராஜபக்ஷ) என்னும் கோஷங்களுடன் தன்னெழுச்சியாக கொதித்தெழுந்தார்கள். போராட்டங்களை கட்டுப்படுத்த கோட்டபாய அரசு துப்பாக்கிப் பிரயோகம் செய்து உயிர்ப் பலி வாங்கியதும் அனைவரும் அறிந்ததே! 

மேலும், வலுப்பெற்ற போராட்டமானது அலரிமாளிகையின் முன்னாலும் காலிமுகத்திடலிலும் அமைதிவழியில் நிகழ்ந்தவண்ணமிருந்தது. அந்தப் போராட்டங்களைக் குழப்பும் வண்ணம் அரச ஆதரவாளர்களால் வன்முறை நிகழ்த்தப்பட்டு, அந்த வன்முறை நாடு முழுவதும் பரவியதுடன் பிரதமர் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதுங்கியதும் தாங்கள் அறிந்ததே! 

புதிய பிரதமரை நியமிக்கவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் ஐனாதிபதியால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் பிரதமர் பதவியினைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது . 

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பான எதிர்கட்சி என்னும் ரீதியில் சில நிபந்தனைகளை விதித்தது. அதில் முக்கியமானவையாக மக்களின் பொதுவான கோரிக்கையான கோட்டாபய ஐனாதிபதிப் பதவியிலிருந்து குறிப்பிட்ட காலத்தில் பதவி விலகவேண்டுமெனவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டுமெனவுமாக இருந்தன. இதே விதிமுறையினையே JVP இனரும் விடுத்திருந்தனர். 

இவ்வாறான அரசியல் அழுத்தம் மற்றும் மக்களின் போராட்ட அழுத்தம் ஆகியவற்றால் கடும் நெருக்குவாரத்தில் இருந்த கோட்டாபயவினை காப்பாற்ற எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பிரதமர் பதிவியினை எடுக்க ரணில் முன்வந்தார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவராக தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார் . 

ஐனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் இல்லாமல் இருந்த கோட்டாபயவினை காக்கும் தெய்வமாகவே ரணில் தென்பட்டார்.

ரணில் வந்தால் பொருளாதாரம் சீராகும் என்னும் மாய வார்த்தைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனைப் பலரும் நம்பினர்; இன்றும் நம்புகின்றனர். உண்மையில் நடந்தது வேற ஒன்றாக இருந்தது.

GO home gota என்னும் கோஷம் வலுவிழக்கச் செய்யப்பட்டது. ராஐபக்ஷக்களை துரத்தும் மக்களின் குறிக்கோள் ரணிலால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

ராஐபக்ஷக்களை ரணில் காப்பாற்றுவதும் ரணிலை ராஐபக்ஷக்கள் காப்பாற்றுவதும் ஒன்றும் புதிதல்ல; ராஐபக்ஷக்களின் வழக்குகளை கிடப்பில் போட்டு, 2019 ஆம் ஆண்டு அவர்களை ஆட்சிபீடம் ஏற்றியவர் ரணில். அதேபோல, எந்த மத்தியவங்கி கொள்ளை பிரச்சினையையும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை ரணிலுக்கு எதிராக பாவித்து அரசமைத்தார்களோ அந்த வழக்குகளை கிடப்பில் போட்டு ரணிலையும் அவரது சகாக்களையும் காப்பாற்றினார்கள் ராஜபக்ஷவினர். இன்று ரணில் மீண்டும் அவரது நண்பர் மஹிந்தவின் குடும்பத்தைக் காப்பாற்றவே எந்தவித நிபந்தனையும் இல்லாமல் களம் இறங்கியுள்ளார். 

2018ஆம் ஆண்டு மைத்திரி ஐனாதிபதியாகவிருந்த காலத்தில் ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு, அரசியல் அமைப்புக்கு மாறாக சஜித்தை பிரதமராக நியமிக்க அழைத்த போது, சஜித் அன்றைய தன் தலைவருக்கும் மக்களின் தீர்ப்புக்கும் துரோகம் செய்யவில்லை. இன்றும் மக்களின் முதன்மை கோரிக்கையான கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பதனை முதல் கோரிக்கையாக வைத்து அதனையே பிரதானமாக வைத்திருக்கின்றார். பதவி வெறி பிடித்து சஜித் மக்களுக்கு துரோகம் செய்ய எண்ணவுமில்லை, இதுவே என்னைப் பொறுத்தவரையில் சிறந்த தலைமைத்துவ பண்பு. மக்கள் எப்போதும் கொள்கைப் பிடிப்புள்ள தலைவர்கள் பக்கம் நிற்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு என்றும் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe