ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பதவியேற்பார் என்று உச்ச கவுன்சில் அறிவித்துள்ளது.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானதை அடுத்து அவரது சகோதரர் ஆன ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் புதிய அதிபாரக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்குப் பிறகு, நாட்டின் மூன்றாவது அதிபாராக ஷேக் முகமது இருப்பார். ஐந்து வருடங்களுக்கு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அமீரகத்தின் அதிபராக பதவிவகிப்பார் என்று உச்ச கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஷேக் முகமது ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். அமீரக ஆயுதப் படைகளை வியூகத் திட்டமிடல், பயிற்சி, நிறுவன அமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
அவரது தலைமையின் கீழ், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகள் சர்வதேச ராணுவ அமைப்புகளால் பெரிதும் போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.