Ads Area

சாய்ந்தமருதில் துர்நாற்றம் வீசுவது தொடர்கிறது : களவிஜத்தில் ஈடுபட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் குழு.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருதில் சில வாரங்களாக மாலை நேரத்தில் பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடுகளை தெரிவித்து வருவதுடன் இந்த தூர்நாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன் இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும், குறித்த பிரதேசத்திலிருந்து துர்நாற்றம் காரணமாக இடம்பெயற வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர், பொலிஸார், ஊடகங்கள் என பலரும் சென்ற வாரம் முழுவதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கள விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டும் அங்கிருந்து பாரியளவிலான தூர்நாற்றம் வெளிவர காரணிகள் இல்லையென்பதை அறிய முடிந்தது. இருந்தாலும் தொடர்ந்தும் வெளிவரும் துர்நாற்றத்திற்கான காரணம் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களினால் முறைப்பாடொன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தலையிட்டு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என்று பொதுமக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டமைக்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையிலான சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் கள விஜயமொன்றை இன்று (09) மதியம் மேற்கொண்டு விலங்கறுமனை நிலையை ஆராய்ந்தனர்.

இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்ட நேரம் விலங்கறுமனையில் பாரியளவிலான துர்நாற்றம் வீசுவதற்கான எவ்வித விஞ்ஞான ரீதியிலான காரணங்களுமில்லை என்பதை தான் கண்ணுற்றதாகவும் இந்த விஜயத்தின் மூலம் எவ்வாறு குறித்த விலங்கறுமனையை மேலும் சிறப்பாகவும், மேம்பட்ட சுகாதார வழிமுறைகளை கையாள்வதன் மூலம் திறன்பட கொண்டு நடத்த முடியும் என்பது தொடர்பிலும் அறிக்கையொன்றை தயாரித்து கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவினரின் ஊடாக சிறப்பாக செய்ய வழிவகைகளை செய்ய எண்ணியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் களவிஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த விலங்கறுமனை பிரதேசத்திற்கு தேவையான ஒன்றாகும். இந்த விலங்கறுமனை இல்லாதிருந்திருந்தால் பலத்த சுகாதார சீர்கேடுகளை இந்த பிராந்தியம் சந்திருக்க நேரிட்டிருக்கும். இருந்தாலும் அரச சுகாதார வழிகாட்டல்கள், நவீன தொழிநுட்பம், மற்றும் உயரிய சுகாதர வழிகாட்டல்களுடன் இந்த விலங்கறுமனை நடத்திச்செல்லப்பட வேண்டும். அதற்கான சகல ஆலோசனைகளையும், மேற்பார்வைகளையும் செய்ய கல்முனை மாநகர சபையுடன் இணைந்து எங்களின் பணிமனை எப்போதும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்வதற்கு சுகாதாரத்துறையினர் முன்வைக்கும் தீர்வை ஏற்று அதன்படி நடக்க தயாராக இருக்கிறோம் என விலங்கறுமனை உரிமையாளரான மீராசாஹிப் அஷ்ரப் சுகாதாரக்குழுவினரிடம் தெரிவித்தார். நீண்டநேரமாக ஆய்வுசெய்த சுகாதாரத்தரப்பினர் விலங்கறுமனை நடவடிக்கை தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளை விலங்கறுமனை ஊழியர்களுக்கு இதன்போது வழங்கினர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe