Ads Area

பெரிய நீலாவணை பகுதியில் கடலில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் மாயம் : ஒருவர் மீட்பு - தேடுதல் பணி தீவிரம்.

 பாறுக் ஷிஹான்

மூன்று பாடசாலை மாணவர்கள் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிலுள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன், கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர்.

வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்குச்சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்துச்சென்றுள்ளது.

இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், ஏனைய இருவரை  தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள், உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவர் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில்; அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும்  ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இச்சம்பவத்தையடுத்து பெருமளவான மக்கள் கடற்கரைப் பகுதியில் குவிந்துள்ளதோடு,  தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe