ஜூலை 25 முதல் நாடு முழுவதும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து எரிபொருள் விநியோக செயல்முறையை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
QR குறியீட்டின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் முன்னோடித் திட்டம் வியாழன் (21) முதல் ஞாயிற்றுக்கிழமை (24) வரை கொழும்பில் பல இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 4.00 மணி வரை QR குறியீட்டு முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு மில்லியன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற முடியாத பட்சத்தில், அந்தந்த நாளின் எண்ணிற்கு ஏற்ப எரிபொருள் வழங்கி அந்த வாகனங்களை வரிசையில் இருந்து அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு அதிகபட்சமாக 1500 ரூபாவும், முச்சக்கரவண்டிக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவும், ஏனைய வாகனங்களுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாவும் எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த நடைமுறைக்கு இணங்காத தரப்பினருக்கு எரிபொருளை வழங்குவதில்லை எனவும், இணங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.