Ads Area

ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு.

புனித ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரஃபா உரையை தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்து இருக்கிறது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் அரபு மாதமான துல்ஹஜ்ஜில் உலகின் பல நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காஃபா எனப்படும் இஸ்லாமியர்களின் முதல் பள்ளிவாசலை சுற்றி வந்து அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை சென்று வருகின்றனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் உள்நாட்டில் வசிக்கும் சில ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் குறைந்து உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மீண்டும் வெளிநாட்டவர்கள் ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து இந்தியா உட்பட பல உலக நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் மக்காவில் திரண்டிருக்கின்றனர். இந்த ஹஜ் யாத்திரையின்போது பல்வேறு முக்கிய கிரியைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள்.

அதில் முக்கியமான ஒன்று அரஃபா பேருரை. அரஃபா என்ற பரந்து விரிந்த மைதானத்தில் துல்ஹஜ் பிறை 9 அன்று (ஹஜ் பெருநாளுக்கு முதல்நாள்) லட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் முன்னிலையில் பேருரை நிகழ்த்தப்படும். முதன்முதலில் நபி நாயகம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த பேரூரை 1400 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதுதான் நபிகள் நாயகத்தின் இறுதி பேருரையாகவும் அமைந்தது.

அரபு மொழியில் தலைமை இமாம் நிகழ்த்தும் இந்த பேருரை இதற்கு முன்னதாக ஆங்கிலம், பிரென்சு, மலாய், உருது, பார்சி, ரஷியன், சைனீஸ், வங்காளம், துர்கீஷ், ஹவுசா ஆகிய 10 மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 4 மொழிகளில் உரையை மொழிபெயர்க்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ், ஸ்பானிஷ், இந்தி, ஸ்வாஹிலி ஆகிய மொழிகளில் அரஃபா பேருரையை மொழி பெயர்க்க மக்கா இமாம் ஷேக் சுதைஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe