நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிராக எதிர்வரும் 07 ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது. கல்முனை மாநகர சபை நிர்வாகத்தால் ஊழியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற கெடுபிடிகளை ஆட்சேபித்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து உள்ளனர் என்று இத்தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஊழியர்கள் மீதான கெடுபிடிகளை தீர்த்து வைக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளனர் என்றும் உரிய தீர்வு கிடைக்க தவறுகின்ற பட்சத்தில் போராட்டம் நிச்சயம் இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உயர் பீடம் கல்முனையில் உள்ள தலைமையகத்தில் கூடி இத்தீர்மானத்தை எடுத்தது என்றும் தெரிவித்த அவர் இதில் எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்களையும் அறிய தந்தார்.
அதனடிப்படையில் அத்தியாவசிய சேவைகள் வழங்குனர்களாக ஊடகவியலாளர்கள், நீர் வழங்கல் வடிகால் சபையினர் ஆகியோரையும் பிரகடனப்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், உரிய மாவட்ட அரசாங்க அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அந்த அந்த பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதவி காலம் முடிவடைந்த பின்னரும் மேலும் ஒரு வருடத்துக்கு உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பல கோடி ரூபாய் வரி பணம் விரயம் செய்யப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக இச்சபைகளுக்கு விசேட ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.