Ads Area

கல்முனையில் எரிவாயு விநியோகத்திற்கான விசேட நடைமுறையை மேம்படுத்த ஏற்பாடு.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதேசங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தை குளறுபடிகளின்றி சீராக முன்னெடுப்பதற்காக குடும்ப அட்டை மற்றும் பாஸ் முறைமை அமுலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பிலான அதிகாரிகள் மட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கல்முனை மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் பிரதேச செயலாளர்கள், மாநகர பிரதி முதல்வர், ஆணையாளர், பொலிஸ் அதிகாரிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், எரிவாயு நிறுவனங்களின் பிராந்திய அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய விசேட செயலணி மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கடந்த மாதம் 04ஆம் திகதி தொடக்கம் பல தடவைகள் இச்செயலணி மாநகர சபையில் கூடி, இப்பிரதேசங்களில் எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தின்போது ஏற்படுகின்ற குழப்பங்களை தவிர்ப்பதற்கும் முறைகேடான செயற்பாடுகள், பதுக்கல் மற்றும் கருப்புச்சந்தை வியாபாரத்தை முறியடிப்பதற்கும் அனைத்து மக்களுக்கும் அவை இலகுவாக கிடைப்பதற்கும் ஏற்ற வகையில் விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசித்து, அதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தது.

உத்தேச நடைமுறைகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை மாநகர முதல்வர் தலைமையிலான குழுவொன்று இரு தடவைகள் சந்தித்து, கலந்துரையாடியிருந்ததுடன் அவரது அனுமதி, ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டிருந்தது.

இதையடுத்து மாநகர முதல்வரும் பிரதேச செயலாளர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இவ்விசேட திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்துக் குடும்பங்களும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கான குடும்ப அட்டையும் அதனோடிணைந்ததாக வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்காக விசேட அனுமதிப்பத்திரமும் (பாஸ்) கிராம சேவகர் ஊடாக தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம் சில இடங்களில் எரிவாயு விநியோகம் குளறுபடியின்றி சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

அதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சிபட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை வந்ததும் இதே அடிப்படையில் குடும்ப அட்டையின் பிரகாரம் தேவையான ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதனை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு மேலதிகமாக கடற்றொழில், விவசாயம், கைத்தொழில்துறைகளுக்கும் உணவுப் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபார்சுகளுக்கேற்ப முறையாக விநியோகிப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe