Ads Area

சமூக வலைத்தளங்களில் விரயமாக்கும் நேரத்தை குர்ஆனை ஓத, விளங்க பயன்படுத்துங்கள்.

 (ஊடகப்பிரிவு)

இஸ்லாம் கூறும் நற்செயல்களை வாழ்வில் கடைப்பிடிக்க, முஹர்ரம் மாதத்திலிருந்து முன்வர வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

முஹர்ரம் மாதப்பிறப்பை கொண்டாடும் விஷேட நிகழ்வு இன்று கொழும்பு, சிம்மாங்கோடு ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் பிரதம அதிதியாக கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கலந்து கொண்டார்.

இதில் மேலும் உரையாற்றிய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட், 

முஸ்லிம் உம்மத்தின் கட்டுக்கோப்பு குலையாதிருப்பதையே அல்லாஹுத் தஆலா விரும்புகிறான். இதனை வலியுறுத்தும் வகையில் "நீங்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்" என்று திருமறை கூறுகிறது. 

இந்த இறைவசனம் பற்றி எமது இளைஞர்கள் சிந்திக்க 

வேண்டும். நாளாந்தம் சமூகவலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இது எமது சமூகத்துக்குள் பிளவுகளை தோற்றுவிக்கிறது. ஒரு மனிதனை நோவினை செய்வது சர்வசாதாரணமாகி விட்டது. இதற்கான தண்டனைகள் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். 

எனவே, சமூக வலைத்தளங்களில் நேரத்தை விரயமாக்காது, புனித குர்ஆனை விளங்க, படிக்க மற்றும் ஓதுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

புனித குர்ஆனின் அர்த்தங்களைப் படிக்க முனைந்தால், இந்த எச்சரிக்கை பற்றிய அச்சங்கள் எழும். குர்ஆனைப் படிப்பதற்கு அரபுமொழி தெரிந்திருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். 

ஆசையோடு முயற்சித்தால் அல்லாஹ் அருள்புரிவான். 1972 இல், எனக்கு 11 வயதாக இருக்கும் போது தான் புனித குர்ஆனை படிக்க வேண்டுமென்ற ஆசை வந்தது. 

இதே, பள்ளிவாசலில் "தறாவீஹ்" தொழுகையில் ஓதப்பட்ட "நீங்கள் உங்களுக்குள் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் என்ற வசனமே இந்த ஆசையை ஏற்படுத்தியது.  

நாட்டில் இன்றுள்ளது பொருளாதாரப் பிரச்சினை தான். இது தீர்ந்து சுமூகநிலை ஏற்பட முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe