ஒரு காலத்தில் உலகச் சுற்றுலா மேட்டுக்குடியினருக்கானதாக இருந்த நிலை இன்று மாறியுள்ளது. போட்டி நிறுவனங்களால் பட்ஜெட்டில் விமானக் கட்டணங்கள், பாஸ்போர்ட், விசா நடைமுறை பற்றிய தகவல்களை அறிவது எளிதானது, ஐடி வேலைவாய்ப்புகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகளால் அனைவருக்கும் உலக சுற்றுலா சாத்தியமாகியுள்ளது.
உலக நாடுகளுக்கு செல்லும் போது அந்நாட்டின் தூதரகத்திற்கு சென்று விசாவிற்கு விண்ணப்பித்து அனுமதி கிடைத்ததும் பயணிக்க வேண்டும். தற்போது இந்தியாவின் பாஸ்போர்ட் வலுப்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சக நடவடிக்கையால் 60 நாடுகளுக்கு நாம் விசா இல்லாமல் பயணிக்கலாம். அங்கு சென்று விசா பெற்றுக்கொள்ளலாம்.
சர்வதேச விமானப் பயண ஆணையத்தின் தரவுகளை வைத்து ஹென்லே பாஸ்போர்ட் தரவரிசை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. எந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாமோ அந்த நாடு முதல் இடத்தை பிடிக்கும். அந்த வகையில் ஜப்பான் வலுவான பாஸ்போர்ட்டாக திகழ்கிறது. 193 நாடுகள் ஜப்பானியர்களுக்கு ஆன் அரைவல் விசா வழங்குகின்றன. அடுத்ததாக சிங்கப்பூர், தென்கொரியா 2ம் இடத்தில் உள்ளது. 192 நாடுகள் விசா இன்றி இந்நாட்டவர்களை ஏற்றுக்கொள்கின்றன. இப்பட்டியலில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு தற்போது 60 நாடுகளுக்கு விசா-ஆன்-அரைவல் அனுமதி உள்ளது. தீவு தேசத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா, மாலத்தீவுகள், சேஷெல்ஸ், மொரிஷியஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிஜி அல்லது குக் தீவுகளுக்கு விசா இன்றி செல்லலாம். ஜிம்பாப்வே, தான்சானியா மற்றும் மடகாஸ்கர் ஆகியவற்றுக்கும் விசா இல்லாமல் செல்லலாம். அவை காடுகளில் சபாரி செல்வதற்கு சிறந்த இடங்கள்.
இந்தியாவுக்கான 60 நாடுகளில் இரண்டு மட்டுமே ஐரோப்பிய நாடுகள். அவை அல்பேனியா மற்றும் செர்பியா. இங்கும் நேரடியாக சென்றடைந்து விசா பெற்று பயணிக்கலாம். அதே போல் மத்திய கிழக்கில் கத்தார், ஓமன், ஜோர்டானுக்கும் விசா தேவையில்லை. அண்டை நாடுகளான இலங்கை, நேபாள், பூட்டான், கம்போடியா, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விசா பற்றிய கவலையின்றி பயணிக்கலாம்.