பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசியக்கட்சிகள் ஈடுபட வேண்டுமென அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதி தேர்வு தொடர்பாக அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் புதிய ஜனாதிபதியைத்தேர்வு செய்கின்ற சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது. அராஜகங்களை மேற்கொண்ட பொருளாதார ரீதியாகவும் சீரழித்த, எமது சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காகவும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தும் எமது இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக வந்த மிக மோசமான ஒரு ஜனாதிபதி சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களினாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த நாட்டில் புதியதொரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து பாராளுமன்றப் பிரதிநிதிகளினாலும் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்.
வேட்புமனுத்தாக்கல் இடம்பெறவுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க, டளஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் களமிறக்கபடவுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் பரப்பிலிருக்கின்ற தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட கட்சிகள் அத்தோடு தமிழர் நலன்சார்ந்து செயற்படுகின்ற தமிழ் தேசிய பரப்பிற்கப்பால் இருக்கின்ற மலையகக் கட்சிகள் என்ன செய்யப்போகின்றார்கள்? என்பது முக்கியமானதொன்றாக இருக்கின்றது.
தமிழ் தேசிய பரப்பிலிருக்கின்ற தமிழ்க்கட்சிகள் தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி அல்லது தெரிவு செய்யப்படவிருக்கின்ற வேட்பாளர்களிடம் என்ன கோரிக்கைகளை முன்வைக்க போகின்றார்கள்? என்கின்ற விடயம் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றது.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை மட்டுமல்லாமல் ஏனைய இறைமை, எங்கள் இனம் சார்ந்த பிரச்சினைகள் கூடுதலாகக் காணப்படுகின்றது.
விசேடமாக அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்கள் கொடுக்கப்படுகின்ற கோரிக்கையானது உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்றாகியுள்ளது. வட, கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமானது அம்பாறை மாவட்டமாகும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் இருப்பென்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்களின் உரிமை, இன, மத, இருப்பு சார்ந்த விடயங்கள் என்பன தற்போது கேள்விக்குறியாகி கவலைக்கிடமாகியுள்ளது.
இந்த வகையில், தமிழ் தேசிய பரப்பிலுள்ள தமிழ் தேசியக்கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனோடு தமிழ் தேசியக்கட்சிகள் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சி என்பன கூடுதலான கவனத்தினைச் செலுத்த வேண்டியிருக்கின்றது.
அதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது முதலாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.
இச்செயலகத்திற்கான நிதி, காணி அதிகாரம் என்பன கொடுக்கப்படாமல் தற்போதும் கூட மறுக்கப்பட்டுக் காணப்படுகின்றது.
அதனடிப்படையில், அம்பாறை மாவட்ட மக்களின் முதலாவது கோரிக்கையாக வடக்கு பிரதேச செயலகத்தின் காணி, நிதி அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இரண்டாது தொல்லியல் மற்றும் வன இலாக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தொல்லியல் என்ற போர்வையில் விகாரைகள் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைள் மற்றும் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்சினைகளாகும்.
அந்த வகையில், புதிய ஜனாதிபதி வேட்பாளர்களிடையே தமிழ் தேசியக்கட்சிகள் இவ்வாறான விடயங்களை வேண்டுகோளாக முன்வைப்பது அவசியமாகும்.
இது அம்பாறை மாவட்ட அனைத்து மக்களின் முக்கிய கோரிக்கையாகக்வ்காணப்படுகின்றது. இது தவிர, அண்மையில் கூட பாராளுமன்ற உறுப்பினர் சி.வீ விக்ணேஸ்வரன் வடக்கை மையப்படுத்தி கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதில் வடக்கை மட்டும் முக்கியமான கோரிக்கைகளாக வைக்காமல் அம்பாறை மாவட்டத்தின் இருப்பை அல்லது பாரம்பரியத்தைப் பாதுகாக்கின்ற விடயத்தை முக்கியமாக முன்வைக்க வேண்டும்.
வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். தொல்லியல் என்ற போர்வையில் அத்துமீறி பிடிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் விகாரைகள் அமைப்பது தடை செய்யப்பட வேண்டியதொன்றாக இருக்கின்றது.
அது மட்டுமன்றி, அனைத்து தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் மட்டுமல்லாது, மலையகக்கட்சிகள் ஆளும் கட்சியிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இவ்விடயத்தை முன்வைக்க வேண்டிய கடப்பாடுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்.
தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வந்து அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவோம் என்ற போலி வார்த்தைகளைக் கூறாமல் இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டும்.
இவ்விடயம் தான் அம்பாறை மாவட்ட மக்கள் உங்கள் மீது வைக்கின்ற ஒரு விண்ணப்பமாகவுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இதற்கான ஒரு நடவடிக்கையை எடுக்குமென்று நினைக்கின்றேன். அது போன்று, ஏனைய கட்சிகளும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ள விரும்பகின்றேன் எனத் தெரிவித்தார்.