சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஒருவரின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதும், அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு 5 இலட்சம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும், மற்றொரு நபரின் தனியுரிமையை மீறும் வகையில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால், UAE இன் சட்டத்தின்படி நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
2018 ஆம் ஆண்டில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தில் ஒருவர் அழுவதைப் படம்பிடித்ததற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார், அந்த வீடியோ விரைவில் வைரலானது குறிப்பிடத் தக்கதாகும்.
பின்னர், துபாய் காவல்துறை, மற்றவர்களின் அனுமதியின்றி படம் எடுப்பது அல்லது புகைப்படம் எடுப்பது அல்லது இணையத்தில் மற்றவர்களை அவதூறு செய்வது போன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது.
அதே போல் சாலைகளில் விபத்து சம்பவங்கள் நடந்திருந்தால் அந்த விபத்தையோ, அல்லது காயமுற்ற நபர்களையோ, அல்லது மரணித்த நபர்களையோ புகைப்படமோ, வீடியோவோ எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.