Ads Area

காரைதீவு, மாளிகைக்காட்டை ஊடறுத்து ஓடும் தோணாவினால் அச்சுறுத்தல்.

 நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள காரைதீவு, மாளிகைக்காடு பிரதேசத்தை இடையறுத்து ஓடிக்கொண்டிருக்கும் தோணா குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த நீரோடையாக பலமாதங்களாக காட்சியளிக்கிறது. இதனால் கடுமையான சுகாதார சீர்கேடுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நீரோடையை அண்டியதாக காரைதீவில் ஒரு வாசிகசாலையும், மாளிகைக்காட்டில் ஒரு வாசிகசாலையுமாக இரு வாசிகசாலைகள், பாலர் பாடசாலை, பொதுமக்கள் குடியிருப்புக்கள், 500 மாணவர்களுக்கு மேல் கல்விபயிலும் பிரதேசத்தின் முக்கிய பாடசாலை, வங்கி என்பன அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் இருந்து அடிக்கடி துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமின்றி குப்பைகள் மற்றும் சல்பினியாக்களினால் குறித்த நீர்நிலை அடைத்துக் காணப்படுவதனால் நீர் வடிந்தோட முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

முறையற்ற திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம் காரணமாக நீர்நிலை ஓரங்களில் திண்மக்கழிவுகள், விலங்கு பாகங்கள் வீசப்பட்டு காணப்படுகின்றது. இதனால் கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் அதிகரித்து காணப்படுவதுடன் நீர்நிலையை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்களும் வளர்ந்துள்ளது. இந்த நீர்நிலை (தோணா) மற்றும் நீர்நிலை ஓரங்களை துப்பரவு செய்வதற்கான ஏற்பாடுகளை காரைதீவு பிரதேச சபை, பிரதேச செயலகம், நீர்ப்பாசன திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்டவர்கள் செய்ய உடனடியாக முன்வர வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா மற்றும் பொதுமக்கள் இணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe