(எஸ்.அஷ்ரப்கான்)
நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தபட்ட இம்றான் பிறீமியர் லீக் சீசன்-05 இறுதிப்போட்டி கடந்த 19.08.2022ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விறுதிப் போட்டியில் அம்பாறை பிராந்தியத்தில் பலம் பொருந்திய சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் மோதியது.
இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக்கழக அணியினர் முதலில் துடுப்படுத்தாடத் தீர்மானித்ததற்கமைவாக, 20 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 196 ஒட்டங்களைப் பெற்றனர்.
இவ்வணி சார்பாக அதிகூடிய ஓட்டமாக முஹம்மட் இர்ஷாட் 25 பந்துகளைச் சந்தித்து 56 ஒட்டங்களைப் பெற்றார். சாய்ந்தமருது விளாஸ்டர் அணி சார்பாக பந்து வீச்சில் றிழ்வான் 3.5 ஓவர் பந்து வீசி 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் அணியினர் 16 பந்து வீச்சு ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர்.
விளாஸ்டர் அணி சார்பாக அஸ்பாக்கினால் 25 ஓட்டங்கள் அதிகூடிய ஓட்டமாகப் பெறப்பட்டது. எஸ்.எஸ்.சி.அணி சார்பாக பந்து வீச்சில் முஹம்மட் றமீஸ் மற்றும் முஹம்மட் இஸ்மத் முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.
மேலதிக 91 ஒட்டங்களால் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. விளையாட்டுக்கழக அணியினர் மாபெரும் வெற்றி பெற்று இம்றான் பிறீமியர் லீக் சீசன்-05 இனுடைய சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதி ப்போட்டியில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.சி அணியினருக்கு வெற்றி கிண்ணமும் 60,000/- ரூபா ரொக்கப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் நிலைக்கு வந்த சாய்ந்தமருது விளாஸ்டர் அணியினருக்கு கிண்ணமும் 30,000/- ரூபா பணமும் வழங்கப்பட்டது.
இவ்விறுதிப்போட்டியின் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளரும், இச்சுற்றுச்போட்டியின் பிரதான அனுசரனையாளர்களான ஈ.எப்.சி. நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான எம்.ஏ.எம்.தாஹிர், இம்றான் விளையாட்டுக் கழகத்தலைவரும் சட்டத்தரணியும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.றியாஸ் ஆதம், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் பிரமுகர் எம்.நிஸார் ஆசிரியர் ஆகியோரால் இரு அணியினருக்குமான வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.