Ads Area

மாவடிப்பள்ளி உருக்கு இரும்புத் தொழிற்சாலையில் போதைக்காக ஒன்றரைக்கோடியை கொள்ளையிட்ட இளைஞர் குழு : ஐவர் கைது

பாறுக் ஷிஹான்

சுமார் ஒரண்டரைக் கோடியே ரூபாய் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்களை கொள்ளையிட்டு சென்ற 5 சந்தேக நபர்கள் காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியிலுள்ள உருக்கு இரும்புத் தொழிற்சாலையில் இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை குறித்த தொழிற்சாலையின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட பூட்டுக்கள் உடைக்கப்பட்டு நுணுக்கமாக பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து உரிமையாளர் தொழிற்சாலையில் பாரிய கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து முறைப்பாடொன்றினை அன்றைய தினம்  காரைதீவு பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே ரத்ணாயக்கவின் உத்தரவிற்கமைய கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக  ஆலோசனையில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செல்டன் ஜெகத் வழிநடத்தலில்  காரைதீவு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டு உரிமையாளர் உட்பட பணியாளர்களின் வாக்குமூலங்களைப்பெற்று நடவடிக்கையில் இறங்கினர்.

இதன் போது, குறித்த கொள்ளைச்சம்பவத்தில் பிரதான  சந்தேக நபர் இனங்காணப்பட்ட நிலையில், அவரை   தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட பொலிஸ் குழு அவரை அணுகி புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், பல வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சந்தேக நபர் இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை கைதானதுடன், கொள்ளைச்சம்பவத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட ஏனைய நால்வர் கைதாயினர்.

இவ்வாறு கைதான 21, 25, 36, 48, 34 வயதுடைய சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சுமார் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் உட்பட  உபகரணங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கைதான சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானதுடன், மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் யாவும் நீதிமன்ற நடவடிக்கைக்காகபொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

இதே வேளை, கடந்தாண்டு அம்பாறை மாவட்டம்  அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், அவர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோக முயற்சி தொடர்பில் கைதான தேரர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்களை விரைவாக கைது செய்வதற்கு  குற்றத்தடுப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் பாராட்டைப் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe