இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் தற்போது கத்தாரின் தோஹாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிகாரிகள் எதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
கத்தார் எமிரி கடற்படைக்கு பயிற்சி மற்றும் பிற சேவைகளை வழங்கும் நிறுவனத்துடன் கத்தாரில் பணிபுரியும் எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் இந்த சம்பவம் பற்றி அறிந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25) அன்று, மிது பார்கவா பதிவிட்ட ட்வீட் மூலம் அம்பலமானது. அவர் தனது ட்வீட் செய்தியில், "அனைவரும் தோஹாவில் 57 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் உள்ளனர்." பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் பூரி உட்பட பல அமைச்சர்கள் இந்த பதிவில் டாக் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம்
முன்னாள் கடற்படை அதிகாரி தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கத்தாரின் பாதுகாப்பு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகப் பங்குதாரராகவும், பாதுகாப்பு உபகரண செயல்பாடு மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, காமிஸ் அல் அஜ்மி, ராயல் ஓமன் விமானப்படையின் ஸ்க்ராட்ரான் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட பூர்ணேந்து திவாரி
ஊடக அறிக்கைகளின்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமாண்டர் பூர்ணேந்து திவாரியும் (ஓய்வு பெற்றவர்) ஒருவர். 2019 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து வெள்நாடு வாழ் இந்தியர்களுக்கான விருதைப் பெற்றார். அவர் இந்திய கடற்படையில் பணியாற்றியபோது, பெரிய போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கியதாக நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள அவரது சுயவிவரம் கூறுகிறது.