நூருல் ஹுதா உமர்
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு 12 பிரிவில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட காரணத்தால் விசேட டெங்கு தடுப்பு பணிகளும் இன்று கிணறுகளில் மீன்கள் விடும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்; எமது அலுவலக சுகாதார பணியாளர்கள் வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே டெங்கு தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு நுளம்பு வளை இடல், நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள். மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் பின் வரும் இடங்களில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன, குளிர்சாதனப் பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள், சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள், கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள், குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள், நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள்.
போன்ற இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்துகொள்ளுமாறும் தொடர்ந்தும் சுத்தம் செய்ய தவரும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு பிரிவினர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக நுளம்பு கள தடுப்புப் பிரிவினர்களும், காரைதீவு 12 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச சபை ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டார்கள்.