2022 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (29) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கை அணியின் இந்த தோல்வியின் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கையின் வேகம் (-0.89) ஆக குறைவடைந்துள்ளது. அதேவேளை ,இதற்கு அமைவாக நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகள் மற்றும் 103.85 என்ற அடிப்படையில் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதன்படி 2022 T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கான தகுதியை இலங்கை அணி பெறுவதற்கு, எதிர்வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான போட்டிகளை ஆகக்கூடிய ஓட்ட வித்தியாசத்தில் வெல்வது கட்டாயமாகும். மேலும் நடைபெறவுள்ள போட்டிகளின் முடிவுகளையும் இலங்கை அணி கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும்.
ஆப்கானிஸ்தான் அல்லது அயர்லாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி எதிர்பாராத தோல்வியை சந்தித்தால், அது இலங்கைக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த துரதிர்ஷ்டவசமான தோல்வியால் , புள்ளிப் பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இலங்கை அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது..
அவுஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற இந்த போட்டியில்,நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.
நியூசிலாந்து அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே நெருக்கடி உருவாக்கினர். இதனால் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த பி(க)ன் அலன் மற்றும் டெவோன் கொன்வெய் ஆகியோர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கேன் வில்லியம்சனும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஆரம்பத்தில் 15 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
பொறுப்புடன் ஆடிய கிளன் பிலிப்ஸ் நிதானமாக நியூசிலாந்து அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களை டெரைல் மிச்சல் உடன் இணைந்து பகிர்ந்து அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார்.
நியூசிலாந்தின் நான்காம் விக்கெட்டாக வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டெரைல் மிச்சல் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளன் பிலிப்ஸ் சதம் அடிக்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாறியதோடு, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவர் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க ஏனையோர் மோசமாக ஆட்டமிழந்திருந்தனர்.
இதனால் 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி 102 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பானுக்க ராஜபக்ஷ 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார். தசுன் ஷானக்க 32 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
thanks-tamil.news