மஹ்சா அமினிக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈரானின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது. உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாரம்பரிய துக்கக் காலத்தின் முடிவில் மஹ்சா அமினியின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேற்கு குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸில் மக்கள் கூட்டம் குவிந்தது. குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான ஈரானிய பெண் அமினி, பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறி அறநெறிப் பொலிசாரால் தெஹ்ரானில் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று இறந்தார்.
மஹ்சா அமினி இறந்து 40 நாட்கள் ஆனதைக் குறிக்கும் வகையில், மஹ்சா அமினியின் சொந்த ஊரில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, மக்களின் கோபம் வெளிப்பட்டது. இஸ்லாமிய குடியரசில் ஏற்பட்ட மிகப்பெரிய அமைதியின்மை அலையில், இளம் பெண்கள் தலையில் போட்டிருந்த முக்காடுகளை எரித்து, பாதுகாப்புப் படையினரை எதிர்கொள்வதை காண முடிந்தது.
ஈரானின் குர்திஷ் பிராந்தியங்களில் உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் நார்வேயை தளமாகக் கொண்ட ஹெங்காவ் என்ற அமைப்பு இந்த அத்துமீறல் தொடர்பாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
"பாதுகாப்புப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, ஜிந்தன் சதுக்கத்தில் கூடியிருந்த, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன"
சாகேஸில் சுமார் 2,000 பேர் கூடி "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்று கோஷமிட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், நெடுஞ்சாலை வழியாகவும், வயல்வெளிகள் வழியாகவும், ஆற்றின் குறுக்கே நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பதியப்பட்டது.
சமூக, ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து. ஆடை கெடுபிடிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.