Ads Area

பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்.

 (எம்.மனோசித்ரா)

நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இவ்வருடத்தில் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 274 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில், செப்டெம்பர் மாதமாகும்போது அந்த எண்ணிக்கை 342ஆக அதிகரித்துள்ளதாகவும் வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு 18  30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 25 நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50ஆக உயர்வடைந்துள்ளது. 

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேரும் பாடசாலை மாணவர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எச்.ஐ.வி. உட்பட 95 சதவீதமான பாலியல் நோய்கள் பாலியல் தொடர்புகளின் ஊடாகவே பரவுகின்றன. 

பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வி உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வின்மையே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

thanks-virakesari



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe