எம்.எஸ்.தீன்
இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்றுக்கான சாத்தியங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக ஒற்றுமைப்பட்டுச் செயல்பட வேண்டியதொரு காலகட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒற்றுமையுடன் செயற்பட்டன. அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தது மட்டுமின்றி பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும், முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் குரல் கொடுத்தனர். இந்த செயற்பாட்டுக்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது.
முஸ்லிம் கட்சிகளிடையும், தலைவர்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயும் காணப்பட்ட இந்த ஒற்றுமை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்பிய போதிலும், அதனை செய்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லை.
அவர்களுடைய கட்சி ரீதியான அல்லது பிரதேச ரீதியான அரசியலை மேற்கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை அல்லது ஒருகூட்டமைப்பாக செயற்படுதன் அவசியம் குறித்து சிந்திக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கான இந்த ஒற்றுமையை அவர்களுடைய சுயநலத்திற்காக குழிதோண்டிப் புதைத்தார்கள்.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்டி மனப்பான்மையுடன் செய்யப்பட்டன. தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று செயற்படவில்லை. எதிரும், புதிருமான அரசியலையே மேற்கொண்டனர்.
இவ்வாறு கட்சி அடிப்படையில் செயற்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததன் பின்னர் அவர்களுடைய வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொள்வதற்காகவும், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கட்சிக் கட்டுப்பாடுகளையும், சமூகப் பொறுப்புகளையும் மறந்து செயற்பட்டனர்.
தற்போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரைமறை வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்களா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர்களுடைய மக்கள் தொடர்பு காணப்படுகின்றது. அவர்கள் மக்களை சந்திப்பதற்கு பதிலாக கொழும்பிலே தங்களுடைய வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதேவேளை முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் போட்டியிட்ட கட்சிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாதவொரு நிலையும் காணப்படுகின்றது. முஸ்லிம் கட்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து ஒரு கூட்டமைப்பாக எதிர்வருகின்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி ரீதியாகவும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியொரு குழுவாகவும் அல்லது கூட்டமைப்பாகவும் செயற்படும் தகவல்கள் உண்மையாகுமாயின், அது பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவுகளை முஸ்லிம் அரசியலில் ஏற்படுத்தும்.
நாடு பொதுத்தேர்தலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையில் உறுதியான அரசாங்கம் அமைய வேண்டும் என்று விரும்புகின்றன.
அவ்வாறுதொரு உறுதியான அரசாங்கம் அமையும் போது மாத்திரம் தான் இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் என்றதொரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தனி குழுவாகவும், முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையிலும், பேரினவாத கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதனால் முஸ்லிம்களுடைய வாக்குகள் சிதறுவதற்கும், முஸ்லிம்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.
முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கணிசமான அளவு இருக்கின்ற தற்போதைய நிலையில் கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயற்படாததன் காரணமாக முஸ்லிம்களுடைய அரசியல் மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது.
இத்தகையதொரு நிலையில் முஸ்லிம்களுடைய வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறப்படும் போது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் வீழ்ச்சி ஏற்படும்.
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்படுகின்ற வீழ்ச்சி முஸ்லிம்களுடைய அரசியல் பலத்தை தற்போது இருப்பதனை விடவும் மிகவும் மோசமானதொரு கீழ் நிலைக்குள் தள்ளிவிடும். இதனை முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் வாக்காளர்களும் உணர்ந்து கொள்வது மிக அவசியமானதொன்றாகும்.
முஸ்லிம்களுடைய வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறி முஸ்லிம்களுடைய அரசியல்பலம் சிதைவடைவதனையிட்டு முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் அரசியலில்வாதிகளுக்கம் எந்தவொரு கவலையும் கிடையாது. அவர்களிடம் சமூக சிந்தனையும் கிடையாது. இதனால்தான் ஆளுக்கொரு கட்சியை வைத்துக்கொண்டு செயற்படுகிறார்கள்.
முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் பெருந்தொகையான பணத்தினை செலவீடு செய்தும், ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்ற பிரதேசவாத உணர்ச்சிகளை மேலோங்கச் செய்தும் முஸ்லிம் வாக்காளர்களை மூளை சலவை செய்து வெற்றி பெறுகின்றார்கள்.
தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு தேர்தல் கால கடன்களை அடைப்பதுடன், கோடிகளின் அதிபதியாகவும் மாறிக்கொள்வார்கள். இதுவே முஸ்லிம் அரசியலின் பரிதாப நிலையாகும்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுகின்ற இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும். முஸ்லிம் வாக்குகள் சிதைவடைவதனை தடுப்பதன் மூலமாகத்தான் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் அல்லது பாதுகாக்கவும் முடியும். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கலாம்.
முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக செயல்படும் போதுதான் முஸ்லிம் சமூகத்திற்கான ஒரு பொதுவேலைத் திட்டத்தை உருவாக்க முடியும். அந்த வேலைத்திட்டத்தினை அடைவதற்குரிய முயற்சிகளை முஸ்லிம் கட்சிகளினால் ஒற்றுமையுடன் செயல்படுத்தவும் முடியும்.
இதனை செய்யாது ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் வேறுபட்ட பேரினவாதக் கட்சிகளின் பின்னால் தொடர்ந்தும் பயணிக்குமேயாக இருந்தால் முஸ்லிம்களுடைய அரசியல் வெற்றிடத்தை நோக்கியதாகவே அமையும் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்ற போது மாத்திரம்தான் முஸ்லிம் வாக்காளர்களினால் தாம் நினைக்கின்ற அல்லது விரும்புகின்ற ஒரு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் உருவாக்கப்படும்.
கடந்த காலங்களில் பேரினவாத கட்சிகளுடன் இணைந்து மூன்று வேட்பாளர்களை தேர்தலில் களம் இறக்கி அந்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி அவர்கள் வெற்றியடைந்த வரலாறுகள் உள்ளன.
அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் சமூகத்தை ஏமாற்றி நயவஞ்சகத்தனமாக நடந்து கொண்டார்களே அல்லாமல் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ஆதலால் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பொது வேலை திட்டத்தின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடுகின்ற போது அந்த கூட்டமைப்பில் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அந்த வேட்பாளர்களில் சிறந்தவர்களை முஸ்லிம்கள் தெரிவு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் முதற்தரத்தில் செயற்பட வேண்டும். இன்று முஸ்லிம்களிடையே பல கட்சிகள் இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் தான் தாய்க் கட்சியாக காணப்படுகிறது. ஆகவே தாய் கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏனைய கட்சிகளை விடவும் அதிக கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.
முஸ்லிம் காங்கிரஸினுடைய பிற்போக்குத்தனமான செயற்பாடுகள் காரணமாகவும், அமைச்சர் பதவிகளில் கொண்டவர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தான் முஸ்லிம்களிடைய பல கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆதலால், அதற்கான பிராச்சித்தியத்தை அகட்சி மேற்கொள்ள வேண்டும்.
thanks-virakesari