Ads Area

உலக வங்கியின் நிதித் திட்டத்தின் கீழ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டல் கண்காட்சி.


 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் உலக வங்கியின் நிதித் திட்டத்தின் கீழ் கலை கலாசார பீடத்தில் செயற்படுத்தப்படும் AHEAD செயற்றிட்டத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

இத்தொழில் வழிகாட்டல் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

பட்டதாரி மாணவர்களுக்கு சிறந்த தொழில் வழிகாட்டல்களை வழங்குவதனை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மெற்றோபொலிட்டன் கல்லூரி, சமாதான மற்றும் சமூகச் செயற்பாட்டு அமைப்பு, மேர்சி கல்வி வளாகம், ஜஹி நெசவாளர்கள் நிறுவனம், பிராண்டிக்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமையம், சுதந்திர ஊடக கண்காணிப்பகம், அம்பாரை மாவட்ட சமூக நலன்புரி அமைப்பு, ஹியுமன் லிங் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் கலந்துகொண்டன.

நிகழ்வில் கலந்துகொண்ட நிறுவனங்கள் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கியதுடன் எதிர்காலத்தில் மாணவர்களை தமது நிறுவனங்களில் தொழிற் பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வினையும் மேற்கொண்டன. குறித்த நிகழ்வில் கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இக்கண்காட்சி நிகழ்வில் பல்கலைக்கழக AHEAD செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எம்.ஏ.எம். றமீஸ், அதன் இணைப்பாளர் சிஷே்ட விரிவுரையாளர் பௌசுல் கரீமா, குறித்த நிகழ்விற்கான இணைப்பாளர் விரிவுரையாளர் பாத்திமா சஜீதா உள்ளிட்டவர்களுடன் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிதியாளர், குறித்த செயற்றிட்டத்திற்கான பிரதிப் பதிவாளர் மற்றும் உதவி நிதியாளர்,  கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர், சிரேஷ்ட மற்றும் கணிஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe