Ads Area

குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது - மெதகொட தம்மானந்த தேரர்.

 (இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலை இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குருந்தூர் மலை பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

பெபிலியான சுனேத்ரா தேவி  மஹா பிரிவெனா விகாரையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒருசில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தில் உண்மையை அறிந்துக் கொண்டு குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அமைதியாக செயற்படுகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

100 -103 வரையான காலப்பகுதியில் குறுந்தூர் மலையின் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவான நிலப்பரப்பை குருந்தூர் மலை விகாரை கொண்டுள்ளது.இந்த விகாரைக்கு சொந்தமான காணியில் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்டுகிறார்கள்.

புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. குறுகிய நோக்கத்துக்காக புத்தசாசனத்தின் அடையாளங்களை இவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

thanks-virakesari



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe