ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறை ஊழியர்களுக்கு தியாகிகள் நினைவு தினம் மற்றும் தேசிய தினத்தை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2022 வரை தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. MoHRE இது குறித்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் “2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் தனியார் துறைகளுக்கான பொது விடுமுறை நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை தீர்மானத்தை அமல்படுத்துவதற்காக அமைச்சகம் மூன்று நாள் அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறையை அறிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், டிசம்பர் 5, திங்கட்கிழமை முதல் மீண்டும் வேலை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் அமைச்சரவையானது பொது மற்றும் தனியார் துறைகளுக்கு சமமான விடுமுறைகளை வழங்கியுள்ளது. இந்த முடிவு இரு துறைகளிலும் உள்ள ஊழியர்களுக்கு சமமான எண்ணிக்கையிலான அதிகாரப்பூர்வ விடுமுறைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 30 ஆம் தேதி தியாகிகள் நினைவு தினம் கொண்டாடுகிறது. இருப்பினும், இந்த தினத்திற்கான விடுமுறையானது இந்த வருடம் தேசிய தின விடுமுறையுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் கடைசி அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாகும். இதனையடுத்து வரும் பொது விடுமுறையானது 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டிற்குதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks-khaleejtamil