Ads Area

சமந்தாவின் யசோதா விமர்சனம்! வாடகைத்தாய் மேட்டரில் இப்படியொரு பிசினஸ் இருக்கா?

 தயாரிப்பு: ஸ்ரீதேவி மூவிஸ்

நடிகர்கள்: சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா, சம்பத்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர்.

இயக்கம்: ஹரி ஹரிஷ்

மதிப்பீடு: 3/5


கணவரை விட்டுப் பிரிந்த பிறகு, திரையுலகில் தன் சுய அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகை சமந்தா, அண்மைக் காலமாக மயோசிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 


இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர் நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. 


‘யசோதா’ நடிகை சமந்தாவை கதையின் நாயகியாக தொடர்ந்து பயணிக்க வைக்குமா, அல்லது முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஜோடியாக நடிக்கும் நட்சத்திர கதாநாயகியாக தொடர வைக்குமா என்பதை இனி காண்போம்.


பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த யசோதா (சமந்தா) தன் தங்கையின் உயிரை காப்பாற்றுவதற்காக மதுபாலா (வரலட்சுமி சரத்குமார்) நடத்தும் ‘ஈவா’ எனும் நவீன பாணிலான வாடகைத்தாய் மையத்தில் வாடகை தாயாக இணைகிறார். 


அங்கு மருத்துவராக இருக்கும் கௌதம் (உன்னி முகுந்தன்) என்பவருக்கும், இவருக்கும் இடையே புரிதலுடன் கூடிய நட்பு ஏற்படுகிறது. அதே தருணத்தில் அங்கு நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. 


அதை அறிந்ததும், அதன் பின்னணி என்ன என ஆராயத் தொடங்குகிறார், யசோதா.


அதே தருணத்தில் ஹொலிவுட் நடிகையொருவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னணி மொடலிங் மங்கையாக இருக்கும் ஒரு பெண்ணும், அவரது காதலர் என அறியப்படும் தொழிலதிபர் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். 


இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணையில் ஈடுபடுகிறது. 


இந்த இரண்டு பயணங்களும் எந்த புள்ளியில் இணைகின்றன, அதன் சுவாரஸ்யமான பின்னணி என்ன என்பதே ‘யசோதா’ படத்தின் கதை.


குடிசையிலிருந்து கோபுரம் போன்ற மாளிகைகளில் வாழும் அனைத்து தரப்பு பெண்மணிகளும், தங்களது தோற்றப் பொலிவுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பார்கள். 


இந்த எண்ணத்தை வணிகமாக்கி, அழகு சாதன பொருட்களின் சந்தை வியாபாரம் பில்லியன் டொலர் கணக்கில் சர்வதேச அளவில் இன்றும் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் அழகு சாதன பொருட்களின் தயாரிப்புக்கும், பெண்களின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து ஒரு கும்பல், சட்ட விரோதமாக வாடகைத்தாய் மூலம் அதனை உருவாக்கி சந்தைப்படுத்த திட்டமிடுகிறது. 


இதனை ‘யசோதா’ என்ற வாடகைத் தாய் அறிந்து கொண்டு, எப்படி அவர்களை வேட்டையாடுகிறார் என்பதே யசோதா படத்தின் அதிரடி திரைக்கதை.

யசோதா என படத்துக்கு பெயரிடப்பட்டிருப்பதால், சமந்தா கதாநாயகியாக நடித்திருப்பதால், அவருடைய கோணத்திலிருந்து கதை தொடங்குகிறது. 


அதிலும் தற்போது வாடகைத் தாய் குறித்த விழிப்புணர்வு ஊடகங்களில் நேர் நிலையாகவும், எதிர் நிலையாகவும் ஏற்படுத்தப்பட்டு வருவதால், இதனை மையப்படுத்திய திரைப்படம் என்பதால் ‘யசோதா’ படம் கூடுதல் கவனத்தை பெறுகிறது.


யசோதாவாக நடித்திருக்கும் சமந்தா உண்மையில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகரின் கடின உழைப்புக்கு இணையாக தன் பங்களிப்பை அளித்திருக்கிறார். 


உணர்வுபூர்வமான காட்சிகளிலும், அக்ஷன் காட்சிகளிலும் தன் சிறந்த ஒத்துழைப்பை பரிபூரணமாக வழங்கி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். 


இனி சமந்தா நட்சத்திர நடிகையாகவும், லேடி பவர் ஸ்டாராகவும் வலம் வரக்கூடும். உச்சக்கட்ட காட்சியில் ‘யசோதா’ யார் என்று தெரியவரும்போது ரசிகர்களுக்கு ஏற்படும் இன்ப அதிர்ச்சி, விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும், ரசிகர்கள் அதனை கொண்டாடுகிறார்கள்.


டொக்டர் கௌதமாக நடித்திருக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத்ராஜ், நடிகர் முரளி சர்மா ஆகியோரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.


பட மாளிகையின் மனநிலைக்கு படத்தில் இடம்பெறும் தாய்மை தொடர்பான பாடல் நன்றாக இருக்கிறது. அதை விட ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. க்ரபிக்ஸ் கலைஞர்களும் தங்களது பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளனர்.


அழகு சாதன பொருட்கள் உற்பத்தித்துறையில் சர்வதேச அளவில் நடைபெறும் சில சட்ட விரோதமான விடயங்களை சொல்ல முயன்றிருக்கும் இரட்டை இயக்குநர்கள், தற்போது பெண்களிடத்தில் பிரபலமாகி வரும்  வாடகைத்தாய் என்ற கருத்தியலை இணைத்து, சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜேனரில் ‘யசோதா’வை உருவாக்கியுள்ளனர். 


இதனை திரையுலக வணிகர்கள் சமயோசிதமான  அணுகுமுறை என இயக்குநர்களை சிலாகித்து பாராட்டுகிறார்கள்.


யசோதா – ஒன் வுமன் ஆர்மி. 

thanks-vanakkamlondon



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe