Ads Area

கல்முனை பஸ் நிலையத்தில் தரிப்புக் கட்டணம் அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்.

 (முதல்வர் ஊடகப் பிரிவு)


கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு தரிப்புக் கட்டணம் அறவிடும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நேற்று புதன்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், வருமானப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.ஏ.அஹத், தனியார் போக்குவரத்து அதிகார சபையின் கல்முனை நிலைய பொறுப்பாளர் ஏ.எம்.கரீம் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் பொதுச் சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இக்கட்டணம் அறவிடும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போவுக்குரிய பஸ்களைத் தவிர ஏனைய அனைத்து இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களுக்கும் இக்கட்டணம் அறவிடப்பட்டவுள்ளது.

குறுந்தூர பயணத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு ஒவ்வொரு தடவையும் 100 ரூபாவும் நெடுந்தூர பயணத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு 200 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe