Ads Area

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சி.!

 இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை. 1951 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இச் சட்டத்தில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக, சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.


இச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவென 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால், ஓய்வுபெற்ற மர்சூப் தலைமையில் நீதியரசர் சலீம் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக் குழு சுமார் 9 வருட கால இழுபறியின் பின்னர் தனது அறிக்கையை கையளித்தது. எனினும் இக் குழுவின் அங்கத்தவர்கள் இரு வேறாகப் பிரிந்து மற்றொரு அறிக்கையையும் சமர்ப்பித்ததால் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் அறிக்கை அமுல்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டது. 2009 இன் பின்னர் நீதியமைச்சர்களாக பதவி வகித்த பலர் இச் சட்டத்தை திருத்துவதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்திய போதிலும் இதனை நடைமுறைப்படுத்தும் துணிவைப் பெற்றிருக்கவில்லை.


இந்த நிலையில்தான் 2019 இல் “ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிப்பதையும் தனது இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தவறான பிரச்சாரங்களும் இதற்கு வலுச்சேர்த்தன. இந்த நிலையில்தான் முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் மேற்கிளம்புகின்றன. இனவாத ஊடகங்கள் காதி நீதிமன்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற போர்வையில் பலரைக் கொண்டுவந்து முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தப்பபிராயங்களைக் கட்டியெழுப்பின.


முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால், ஞானசார தேரரை தலைவராக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் நோக்கமும், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிப்பதாகவே இருந்தது வெளிப்படையானது. இருப்பினும் கோத்தபாய ஆட்சியில் இருக்கும் போதும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்தவோ ஒழிக்கவோ சாத்தியமில்லை.


இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் இத்திருத்த விவகாரம் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது காதி நீதிமன்றக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரும் வகையிலான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழு திருத்தங்கள் தொடர்பாக மத்திய சமர்ப்பித்துள்ள அறிக்கையை அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. எனினும் அதில் எவ்வாறான பரிந்துரைகள் உள்ளன என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் இத்திருத்தங்கள் தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டதை அறிய முடிகிறது.

ஏற்கனவே நீதியரசர் சலீம் மர்சூப் குழுவினாலும் மற்றவர்களாலும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஒரு புறம் வைத்துவிட்டு, புதிது புதிதாக குழுவை அமைத்து இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது விடயத்தில் சகல தரப்புகளும் ஒன்றுபட்டு தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டியது அவசியமாகும்.

காதி நீதிமன்ற முறைமையிலும் காதி நீதிபதிகளிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இக்குறைபாடுகளை நிவர்த்தித்து இந்த முறைமையை மேலும் வலுப்படுத்துவதே இதற்குத் தீர்வாகும். மாறாக இதனை இல்லாதொழிப்பதல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.


காதி நீதிமன்றக் கட்டமைப்பை ஒழித்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை ஒப்படைப்பது எதிலும் தீர்வாக மாறப் போவதில்லை. இது மேலும் இழுத்தடிப்புகளுக்கும் குடும்ப சீரழிவுகளுக்கும் வழிவகுக்கும்.

எனவேதான் இருக்கின்ற காதி நீதிமன்ற கட்டமைப்பின் அதிகாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துவதன் ஊடாக அதனை வலுப்படுத்தவே நாம் முயற்சிக்க வேண்டும். இதனை நோக்கியே சகல தரப்பினரும் செயற்பட வேண்டும்.

வருடக் கணக்கில் இந்த விவகாரத்தை இழுத்தடித்து அரசியல் செய்யாது விரைவில் ஒரு தீர்மானத்திற்கு வருமாறு முஸ்லிம் அரசியல், சிவில் மற்றும் மார்க்க தலைமைகளிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்.


சம்மாந்துறை 24 இணையதளத்தின் செய்திகளை Apps மூலமும் பார்த்துக்கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_strheritageinfo.STR24

thanks- விடிவெள்ளி



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe