நம்மிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் ஊழலை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் வெளிப்படையான ஊழல்கள் தகர்த்தெறியப்படும். இவ் விடயத்தில் நாம் அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.
இவ்வாறு சமூக செயற்பாட்டாளரும், OCD அமைப்பின் தலைவருமான விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன் தெரிவித்தார்.
'2030 இல் யாவருக்கும் வீடு' எனும் தொனிப் பொருளில் தனது சொந்த முயற்சியால் சம்மாந்துறையில் 8 ஆவது வீட்டை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்றுள்ள நிலைமையில் நாம் அனைவரும் முதலில் நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஊழல்வாதிகளையும், ஊழல் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் ஒழித்துக் கட்டுவதில் வெறும் வாய்ப் பேச்சுகளோடு மட்டும் நிற்கின்றோம்.
ஆனால், இதனை மறுபக்கம்; சிந்தித்தோமேயானால் ஊழல் என்கிற திட்டத்துக்கு வழிவகுப்பது நாமாகத்தான் இருக்கின்றோம். தேர்தல் காலங்களில் வெறும் ஐந்து அல்லது பத்தாயிரம் ரூபா பணங்களுக்கும் சில பொருட்களுக்காவும் எமது வாக்குகளை துஷ்பிரயோகம் செய்கின்றோம்.
பின்னர், ஆட்சிக் காலம் முடியும் வரை அழுது கண்ணீர் வடிக்கின்றோம். இது சமூக ஆரோக்கிய கட்டமைப்புக்கு பொருத்தமானதல்ல. ஊழல்வாதிகளுக்கும், அவர்கள் வழித் தோன்றல்களுக்கும் முதலில் விதை போட்டுக் கொடுப்பது நமது சமூகமே அன்றி வேறில்லை.
மாற்றத்தை முதலில் நம்மில் நாம் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு செயற்படும் ஒவ்வொரு நிமிடமும் ஆட்சி, அதிகார கதிரைகள் ஒவ்வொரு நொடியும் உற்று நோக்கியவண்ணமே காணப்படும்.
ஊழல் நடந்தால் தட்டிக்கேட்கும் தையரியம் அப்போதான் நமக்கு வரும்.
அது மாத்திரமன்றி எமது சிந்தனைகளை பரந்துபட்டதாக நோக்கவும் நாங்கள் தயாராக வேண்டும். யார் எதற்கு பொருத்தம், யாரிடம் சமூக மனப்பாங்கு உள்ளது.
இவர் எவ்வாறானவர்? இவரின் இலக்கு என்ன? இவ்வாறு நம்முள் நாமே முன் கேள்விகளை உருவாக்கி அதன் பின்னரே சிறந்தவர்களை தகுந்த பதவிகளுக்கு தெரிவு செய்ய வேண்டும்.
இது விடயத்தில் எமது சமூகம் தெளிவாகாத வரை நாம் சிறந்த சமூக கட்டொழுங்கை பேண முடியாது. சந்தர்ப்பங்களுக்கு மட்டும் சாய்ந்து கொடுப்பவர்களாக நாம் எப்போதும் இருந்துவிடாது தேர்ச்சி நிலை பெற்றவர்களாக மாற்றம் காண முனைய வேண்டும்.
அதற்கு முதலில் நம்மிடமுள்ள ஊழல்களை நாமே தகர்த்தெறிய வேண்டும். - என்றார்.இந் நிகழ்வில் OCD அமைப்பின் ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட புத்திஜீவிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.