Ads Area

பொருளாதார நெருக்கடி நீங்கி, சுபீட்சம் மலரட்டும்; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் புத்தாண்டு வாழ்த்து

 (முதல்வர் ஊடகப் பிரிவு)


பிறந்திருக்கும் புத்தாண்டு - நாட்டில் இன, மத குரோதம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி, சுபீட்சம் மலர்வதற்கு வழிவகுக்கட்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கடந்து சென்ற சில வருடங்கள் - பல துன்ப, துயரங்கள், சோதனைகளை கடந்து சென்றுள்ளன.

நாட்டில் தாண்டவமாடிய கொரோனா பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய விடயங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் நாம் திண்டாடிய நாட்களை இலகுவில் மறந்து விட முடியாது.

வரலாறு காணாத விலைவாசி உயர்வு இன்னும் நீண்டு செல்கிறது. இதனால் துவண்டு போயுள்ள நாம், எப்போது நிமிர்ந்தெழ முடியும் என்ற அங்கலாய்ப்புடன் நாட்களை கடத்திச் செல்கிறோம்.

இந்நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து, இனவாதம், குரோதம், வெறுப்புணர்வு நீங்கி, அன்பு, கருணை, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை மேலோங்கி, ஐக்கியம், சகவாழ்வு, சமத்துவம் தழைத்தோங்கவும் அனைவரதும் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாக அமைவதற்கும் பிரார்த்திப்போம்.

மேலும், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக இன, மத வேறுபாடுகளைக் கடந்து, இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் கைகோர்த்து செயற்பட திடசங்கற்பம் பூணுவோம்.

அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்ந்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe