Ads Area

கல்முனை பொலிஸார் அதிரடி : போதைப்பொருள் கடத்தல் குழு ட்ரோன், நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கைது.

பாறுக் ஷிஹான் 


ஹொரோயின்  போதைப்பொருள் முகவராகச் செயற்பட்ட இளைஞன் மற்றும் குடும்பப்பெண் உள்ளிட்டோரை ட்ரோன், நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரின் (40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி  வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படுகின்ற முஹமட் ஹனீபா அர்சத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை அளக்கின்ற இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டன.


இச்சந்தேக நபர் கடந்த 13.01.2023ம் திகதியன்று  வீதியில் பயணம் செய்த பாடசாலை மாணவனை வாகனமொன்றினால் மோதி தலைமறைவாகி இருந்த நிலையில், பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று, நிந்தவூர், கல்முனை, பெரிய நீலாவணை, மருதமுனை, சம்மாந்துறை போன்ற பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கின்ற பிரதான வியாபாரி எனப்பொலிஸார் குறிப்பிட்டனர்.


தொடர்ந்து கைதான சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் இன்று மதியம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   ஆலோசனையில்    கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப்  தலைமையில் சென்ற  பொலிஸ் சார்ஜன்ட்களான எம்.எம்.எம். அன்வர்  (63037) பொலிஸ் கன்ஸ்டபிள்களான வை.நவராஜ் (8475) எம்.இஷாக்(76433) ராஜபக்ஸ ( 86765) எஸ்.தர்சீகன்(99058)ஆர்.ஹேமானந்த(99059)  வாகனச் சாரதி ஏ.எச்.எம் ஹம்தான்(80994)   குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2  சந்தேக நபர்களான சகோதரன் சகோதரியை   கைது செய்துள்ளனர்.


குறித்த சோதனை நடவடிக்கையின் போது கல்முனை பகுதி செயிலான் வீதியில் அமைந்துள்ள சந்தேக நபரின்  சகோதரியின்  வீடு மற்றும் சாய்ந்தமரது பகுதியில் உள்ள  சந்தேக நபரின்  வீடும் பொலிஸ் குழுக்களினால்  சோதனைக்குள்ளாக்கப்பட்டது.


இதன் போது ஒரு தொகுதி போதைப்பொருட்கள் 2 அதி நவீன ஸ்கேனர்கள் சிசிடிவி டிவீஆர் உபகரணம்  பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.


குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபரின் சகோதரியான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கல்முனை தலைமையக  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு   விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe