Ads Area

காரைதீவு பிரதான வீதியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு.

பாறுக் ஷிஹான் 


திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் மரக்கறிக்கடை உரிமையாளரின் டியோ ரக ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் கடந்த செவ்வாய்க்கிழமை (7) அன்று களவாடிச்செல்லப்பட்டிருந்தது.


காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு அடுத்த நாள் புதன்கிழமை (8) இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.


இதன் போது குறித்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபரொருவர் களவாடிச்செல்வது தொடர்பான சிசிடிவி காணொளியொன்றினை பெற்றதுடன், மேலதிக விசாரணைக்காக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், சனிக்கிழமை (18) கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஹெல்மட் ஒன்றுடன் அநாதரவாக மோட்டார் சைக்கிளொன்று நீண்ட நேரமாக தரித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.


இதற்கமைய கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினர் களவாடப்பட்ட  EP-BCJ-3381 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன், காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கினர்.


குறித்த தகவலைப் பெற்றுக்கொண்ட காரைதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து குறித்த மோட்டார் சைக்கிளைப் பொறுப்பேற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை, திருட்டுச்சந்தேக நபர்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (16) அதிகாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட கறுப்பு நிற பல்சர் 150 Cc (EP BFE 9020) களவாடப்பட்டுள்ளது.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கண்காணிப்பு காணொளியில் உள்ளவாறு நடமாடுயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எனவே, இவ்விரு சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் கல்முனை தலைமையக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக இப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் களவாடப்படுவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe