Ads Area

இலங்கையில் அக்குறணை வெள்ளத்தில் மூழ்குவதைத் தவிர்ப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதிக கரிசனை.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இலங்கையில், மத்திய மலைநாட்டில், அக்குறணை நகரையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓய, மழை காலத்தில் பெருக்கெடுப்பது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்ட யோசனைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சென்ற வாரம் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.
இந்திகா குமாரி அபேசிங்ஹவுடன் கலந்துரையாடினார்.

பிரஸ்தாப யோசனைகளை உள்ளடக்கிய திட்ட வரைவு நிறைவடைந்தவுடனேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கண்டி மாவட்டத்தில், ஹாரிஸ்பத்து தேர்தல் தொகுதியில் பெரும்பாலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மலைப் பாங்கான எழில் மிகு பிரதேசமாக அக்குறணை காணப்படுகிறது. கண்டி - யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகியோர் அதிக மழை வீழ்ச்சியின் போது நீண்ட காலமாக அடிக்கடி சம்பவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முன்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது, கண்டி பிராந்திய அலுவலகத்தின்  ஒத்துழைப்புடன் காணி மீள் சீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாரிய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, மண், மணல் மற்றும் கழிவுகள் மண்டியிருந்த பிங்க ஓயவில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு நீர் தங்கு தடையின்றி வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் உட்பட பல்வேறு பயனுள்ள முயற்சிகளை முன்னெடுத்திருந்ததோடு, பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகளோடு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

அங்கு, உரிய அனுமதி பெற்றிராத சட்டத்துக்குப் புறம்பான நிர்மாணங்களும் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe