அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில் நேற்று (28) இடம்பெற்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவியிருந்தது. இந்தத் தீயினால் நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய அதிகளவிலான ஆவணங்கள் அழிவடைந்திருந்தன.
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் அக்கரைப்பற்றை சேர்ந்த 24 வயதான இருவரும் 18 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர், அக்கரைப்பற்று பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு தீ வைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல், வங்கிக் கணக்கறிக்கை தொடர்பான விபரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் நேற்றுமுன்தினம் (28) உத்தரவிட்டுள்ளார்.
thanksthinakural

