இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பைடன் நிர்வாகம் இலங்கை மக்களின் உரிமைகளை மதிப்பதாக இருந்தால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவு ஒவ்வொரு மனித உரிமைகள் அளவுகோலிலும் திட்டவட்டமாக தோல்வியடைந்துள்ளது.
பைடன் நிர்வாகம் இலங்கை மக்களின் உரிமைகளை மதிப்பதாக இருந்தால், இந்தச் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்' என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய சட்டத்தரணி கரோலின் நாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விமர்சகர்களையும் சிறுபான்மையினரையும் தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான சர்வதேச கண்டனம் இலங்கை அரசாங்கத்தை சட்டத்தை நீக்குவதற்கு உறுதியளிக்க நிர்பந்தித்தது.
எனினும் இதற்கு பதிலாக 2023, மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், 2018இல் கொண்டுவரப்பட்டு, பரவலான கண்டனத்திற்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட சட்டமூலமாகும்.
இந்த வரைவு சட்டம் நகர்த்தப்படும் போது, பைடன் நிர்வாகமும் காங்கிரஸும் மௌனமாக இருந்தால், கருத்து வேறுபாடுகளை நசுக்கும் திறனை மேலும் வலுப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அனுமதியளிக்கும் என்று நாஷ் கூறியுள்ளார்.
உத்தேச சட்டமூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட சீர்திருத்தங்களுக்காக பல தசாப்தங்களாக வாதிட்ட இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலாகும்.
அத்துடன் விமர்சகர்களை குறிவைத்து மௌனமாக்குவதற்கான அரசாங்கத்தின் திறனை உயர்த்துவதற்கான முயற்சியாகும் என்றும் நாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆராய்ச்சியாளர் தியாகி ருவன்பத்திரனவின் கூற்றுப்படி, சர்வதேச சட்டத்திற்கு இணங்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வகுத்துள்ள தரவரிசைகளை, சட்டமூல வரைவாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், சாதாரண சட்டத்தின் கீழ் குற்றங்கள் கூட இப்போது பயங்கரவாத குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. சிவில் ஒத்துழையாமைச் செயல்களையும் கூட பயங்கரவாதக் குற்றங்களாக வகைப்படுத்தும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ருவன்பத்திரன கூறியுள்ளார்
புதிய யோசனை, நீண்டகால தடுப்புக்காவல் என்ற பயங்கரவாத தடுப்பு சட்ட விதிகளையும் கொண்டிருக்கிறது.
சட்டமா அதிபரின் கோரிக்கையின் பேரில் உயர்நீதிமன்றம் இந்த காலத்தை நீடிக்க முடியும்.
இந்த ஏற்பாடு ஆபத்தானது மற்றும் சித்திரவதைக்கு உதவுகிறது என்றும் ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களை தடை செய்வது உட்பட தண்டனைகளில் மரண தண்டனையும் அடங்கும், இதை மன்னிப்பு சபை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆராய்ச்சியாளர் தியாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.