Ads Area

பிள்ளைகளை சரியான பாதையில் பயணிக்க செய்ய அவர்களுடன் நட்புறவுடன் பழகுங்கள் : வித்தியாரம்ப விழாவில் கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் நஸ்மியா தெரிவிப்பு !

 நூருல் ஹுதா உமர்


இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் வழிதவறிச் செல்ல காரணமாக இருப்பது பெற்றோரின் பொடுபோக்கான தன்மையும், அளவுக்கு அதிகமான தொலைக்காட்சி பாவனையின் அதிகரிப்புமே பிரதான காரணமாக இருக்கிறது. பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர்கள் ஒழுக்கத்தை கற்பித்தாலும் கூட தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பாவனை என்பன அதை சீரழித்து விடுகின்றன என கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளரும், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.

கல்முனை கிரீன் பீல்ட் ரோயல் பாடசாலையில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா  இன்று புதன்கிழமை (03)  பாடசாலை வளாகத்தில்  நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இறைவன் எமக்கு வழங்கியிருக்கும் விலைமதிப்பற்ற செல்வமாக எமது குழந்தைகள் இருக்கிறது. அவர்களை நாம் சரியான பாதையில் வழிநடத்தினால் மட்டுமே அவர்கள் சிறந்த பிரஜைகளாக உருவாகுவார்கள். கனவுகளை சுமந்துகொண்டு இன்று பாடசாலை மாணவர்களாக வருகை தந்திருக்கும் இவர்கள் நாளைய தலைவர்கள். இந்த தலைவர்களை ஒழுங்கானவர்களாக உருவாக்க வேண்டியது சமூகத்தின் கடமை. இதில் ஏனையோரை விட பெற்றோருக்கு பாரிய பங்கிருக்கிறது.

தொழில், வேலைப்பழுக்கள் போன்ற அவசரங்கள் நிறைந்த உலகில் நாம் எமது குழந்தைகளின் பாதையை பற்றி கவனிக்க மறந்து விடுகிறோம். அதனால் இன்றைய இளம் சமூகம் பிழையான பாதையில் செல்வதாக உணர முடிகிறது. தொலைக்காட்சி, தொலைபேசி பாவனையை குறைக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய தாயே எனது முன்னேற்றத்தில் அதீத செல்வாக்கு செலுத்தியவர். அதே போன்றே நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் நட்புறவுடன் பழகி அவர்களை புரிந்து கொள்ளுங்கள். அதுவே அவர்களை வெற்றியாளர்களாகவும், சாதனையாளர்களாகவும் மாற்றும் என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe