Ads Area

சூடுபிடித்துள்ள கல்முனை விவகாரம் : அவசரமாகக் கூடிய சம்மேளனம்.



 நூருல் ஹுதா உமர்


 அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக, கல்முனை விவகாரம் தொடர்பில் ஆராயும் அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன விசேட கூட்டம் நேற்று (27) சம்மேளனத்தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


 இதன் போது சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தையும் பற்றி கலந்துரையாடியதுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திற்கான தீர்வை எட்டும் விதமாக உபகுழுவொன்றை இன்று நியமித்துள்ளது.


 அந்த உப குழு கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திலுள்ள விடயங்களைக் கையாளவுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் அதிக முஸ்லிம்கள் வாழும் நகரம் என்ற அடிப்படையிலும், இலங்கை முஸ்லிம்களின் முகவெற்றிலையாக கல்முனை அமைந்துள்ளதென்ற அடிப்படையிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் நிறைந்துள்ள கல்முனையின் இவ்விடயத்தை சிறப்பாகக் கையாண்டு உரியவர்களிடமிருந்து தீர்வை பெற முயற்சிகளையும் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 மற்றுமொரு தீர்மானமாக தமிழ் மக்கள் கூடுதலாகவும் முஸ்லிம்கள் குறைவாகவும் வாழும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் முஸ்லிம்களுக்கு இடம்பெறும் அநீதிகள், பாரபட்சங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சர்கள், உரிய அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து உரிய தீர்வைப்பெற இந்த உபகுழு செயற்படத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 இக்கூட்டத்தில் சம்மேளனச் செயலாளர் ஏ.எல். அன்வர்டீன், பொருளாளர் எஸ்.எம்.சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe