பாறுக் ஷிஹான்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 15வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று (13 05 2023) காலை 09.00 மணியளவில் பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் ஏ.ஆர். மன்சூர் மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் (Prof.Aboobacker Rameez) தலைமையில் வேந்தர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அவர்களின் பாரியாரும் முதற்பெண்மணியுமான சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்து கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.
அதேவேளை, மூன்றாவது அமர்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் பிரதான உரையை நிகழ்த்தினார்.
2023.05.13ம் திகதியும் 2023.05. 14ம் திகதியும் இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன. குறித்த பட்டமளிப்பு விழா நிகழ்வுகளில் முதல் அமர்வில் கலை, கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச்சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச்சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச்சேர்ந்த 380 மாணவர்களும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கலை, கலாசார பீடத்தில் 2015/2016ம் கல்வியாண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ.காதர் விருதை முகம்மட் அலி பாத்திமா அஸ்மியா பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, தமிழில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி 2015/2016 ஆம் கல்வியாண்டில் முகம்மட் ஹுசைன் பாத்திமா றிஸ்லா பெற்றுக்கொண்டதுடன், அதே கல்வியாண்டில் இந்து கலாசார கற்கைக்கான சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை பேபி சாலினி ராமக்கவுண்டர் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச்சேர்ந்த டிவயாளி கிடாரா மலீசா லக்சாணி வசந்த குமாரி 2015/2016 ஆம் கல்வியாண்டில் வர்த்தகத்துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த விருதைப் பெற்றுக்கொண்டதுடன், முகம்மட் நஜீம் பாத்திமா நுஸ்ரா முகாமைத்துவத்துறையில் அல் ஹாஜ் ஏ.எல். இப்ராலெப்பை ஞாபகார்த்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச்சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மட் ஆகில் 2015/2016 ஆம் கல்வியாண்டில் அரபுத்துறையில் சிறந்த மாணருக்கான எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் ஞாபகார்த்த விருதையும் முகம்மட் இப்ராகிம் பாத்திமா ஷீபா Islamic Thought & Civilization துறையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஞாபகார்த்த விருதையும் கலந்தார் லெப்பை பாத்திமா மஸ்லிஹா Islamic Banking and Finance துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, கிறிஷ்ணபிள்ளை மகாலிங்கம் Master Of arts மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் முஹம்மட் மூஸா Master Of Philosophy பட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச்சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெறவுள்ளனர். ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 374 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், வியாபார நிருவாக, முகாமைத்துவ, தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலுக்கமைய இடம்பெற்றன.
பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் விஷேட உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.