Ads Area

தொழிலற்ற இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறியுள்ளனர் : அமீர் அப்னான்

 


நூருல் ஹுதா உமர் 


நாடோ அதாலபாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலினால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.


பலர் தொழில் நிலை பெற்றவர்களாகவுள்ளனர், இன்னும் சிலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். மேலும் பலர் வறுமையால், தொழிலின்மையால் பிழையான பாதையில் பயணித்து தண்டனைக்குரிய குற்றவாளிகளாக மாறி வழக்கும் கையுமாக அலைகின்றனர். 


யுவதிகளுக்கான வாழ்வியல் வசதிகள் தற்போதுள்ளதா? எதுவுமே இல்லை. பல இளவயதுத் திருமணங்களால் பல வாழ்க்கைச் சீரழிவுகளை யுவதிகள் அனுபவிக்கும் கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்தார். 


ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3வது அமர்வு 17, 18 ம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 


இதன் போது உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வுரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 


உத்தேச இளைஞர்கள் பாராளுமன்ற சட்ட மூலத்தின் பிரதான நான்கு பிரிவுகளாக தலைமைத்துவம், ஜனநாயக அமைப்பு, பாராளுமன்ற நடைமுறை, பாராளுமன்ற உறுப்புரிமை ஆகியன காணப்படுகின்றன. 


எனது பிராந்தியத்தில் இளைஞர்களுக்கான தலைமையாக பெரும்பான்மையான நண்பர்கள், சகோதரர்களூடாக இப்பாராளுமன்றம் வந்திருந்தேன். 


இப்பாராளுமன்றமூடாக நன்றிக்கடன் செலுத்த முடியுமா? என அலசிக்கொண்டு சென்ற போது எந்த வாய்ப்பும் பாராளுமன்றமூடகவோ, இங்கிருக்கும் அமைச்சர்களூடாகவோ கிடைக்கப் பெறவில்லை. 


இருந்த போதிலும், இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தினை வைத்துக் கொண்டு பல சேவைகளை உள்ளூர், வெளியூர் முதலீட்டாளர்கள் கொண்டு செவ்வனே செய்து முடிந்தளவு நன்றிக்கடன் செலுத்தியுள்ளேன் என்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.


ஜனநாயக நாட்டில் ஜனநாயக அமைப்பானது ஜனநாயகப் பெறுமதி, ஜனநாயக கலாசாரம் என்ற பிரதான அம்சங்கள் கொண்டிருந்தாலும், இந்த உயர் சபைக்கு தேசிய ஜனநாயகத்தில் என்ன கிடைத்தது என்றால் கேள்வியாகவே கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் நாமுள்ளோம். 


பாராளுமன்ற நடைமுறையே மக்களுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து கொள்ளும் இலகு வழி. இங்கிருந்து சட்டமூலம் உருவாக்கம், கொள்கைத் திட்டங்கள் உருவாக்கம் என்பன நாட்டு மக்கள், இளைஞர்கள் சார்ந்துள்ளன. 


இவ்வுயர் சபையினூடாக பல புதிய சட்டமூலங்கள், புதிய கொள்கைத்திட்டங்களை கடந்த காலங்களில் நாம் விவாதத்திற்கு கொண்டு வந்தோம். 


ஆனால், எங்களுடைய கொள்கைகள் எங்கே? சட்டமூலங்கள் எங்கே? சட்டம் வலுவாக இருந்தாலும், இளைஞர்கள் பாராளுமன்றத்தினூடாக இடம்பெறும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை. 


அதிகாரமில்லா சபையாகவே இச்சபை இயங்கி வருகின்றது. இங்கு கொண்டு வரப்படும் சட்டங்கள், கொள்கைகள் ஒவ்வொரு துறைசார் அமைச்சினூடாக பாராளுமன்றத்தில் கவனத்திற்கொள்ளப்பட்டால் இங்கு பல மாற்றங்கள் கொண்டு வர முடியும்.


தேசிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இளைஞர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு, கல்வி ஊக்குவிப்பு நிகழ்வுகள், போதை அழிவுகளுக்கான அறிவுறுத்தல் நிகழ்வுகள், குற்றங்களும் தண்டனைகளும் எனும் தொனியில் கருத்தரங்குகள் செய்ய இச்சபையின் இன்றைய அறிக்கையில் இணைத்து உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென சபாநாயகருக்கு ஆலோசனை வழங்குகின்றேன். 


நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய எம்மைப் போன்ற இளைஞர்கள் பிரதிநிதிகளினூடாக பல நல்ல திட்டங்களை மக்கள் மயப்படுத்தி செயற்படுத்த ஆலோசனை வழங்குகின்றேன். 


இங்குள்ள அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். எனவே இன்றைய தினத்தோடு இப்பாராளுமன்றம் கலைந்தாலும் எதிர்கால இலங்கைக்கான தேசிய இளைஞர்களை ஒன்றிணைக்கும் செயற்குழுவாகச் செயற்பட அனைவரையும் அழைக்கின்றேன். இவ்வுயர்சபையில் பல உறவுகள், புது அறிமுகங்கள் கிடைத்திருந்தன. இச்சபையிலுள்ள அனைவருக்கும் நன்றிகள். உங்கள் சேவைகளுக்கு வாழ்துக்கள் கூறுகின்றேன். அடுதடுத்து அமையும் பாராளுமன்றம் வலுவானதாக அமைய வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.


இந்நிகழ்வில் விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe