பாறுக் ஷிஹான்.
பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத மீன் வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதிகள், நாற்சந்திகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோதமான மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதுடன், பல்வேறு விபத்துச்சம்பவங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தன.
இதனையடுத்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஒன்றிணைந்து இவ்வாறான சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கை இடம்பெறும் இடங்களை இன்று அடையாளப்படுத்தி எச்சரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை ஒட்டியுடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்துண்டுப்பிரசுரத்தில் ஏலவே நிந்தவூர் பிரதேச சபை சட்டவிரோத மீன் விற்பனை வியாபார நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கூறி பிரேரணைகளை நிறைவேற்றி கட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் இவ்வாறான சட்டவிரோத வியாபாரங்கள் குறிப்பாக மீன் விற்பனை முக்கிய சந்திகளில் சட்டவிரோதமாக அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து தற்போது பல்வேறு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது, இன்று தியேட்டர் வீதி, அலியாண்டை சந்தியில் ஆகியவற்றில் இவ்வாறு எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டதுடன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், வருமான வரிப்பரிசோதகர்கள், பொதுச்சந்தை குத்தகைக்காரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



