Ads Area

சவூதி, குவைத், ஓமானை தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் பஹ்ரைன் அரசு!!

சவூதி அரேபியா, குவைத், ஓமான் போன்ற வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அந்த நாட்டு குடிமக்களையே பணியமர்த்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போன்றே மற்றுமொரு வளைகுடா நாடான பஹ்ரைனிலும் குடிமக்களின் வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கு, பஹ்ரைன்மயமாக்கல் (Bahrainization) எனும் திட்டத்தை பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளது.


நாட்டில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டமானது தற்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


பஹ்ரைன் அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையின் படி, பஹ்ரைனில் உள்ள பல நிறுவனங்கள் இப்போது பஹ்ரைன் அல்லாத வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அந்த காலிப்பணியிடங்களை பஹ்ரைன் நாட்டு குடிமக்களை கொண்டு நிரப்புவதில் முனைப்பு காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களின் படி, பஹ்ரைனில் 2012 முதல் கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு முன்பு வரை வேலையின்மை விகிதம் 4% வரை பதிவாகியதாகவும் அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வேலையின்மை விகிதம் 7.5% ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த விகிதத்தை 3.5% க்குக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மேலும், பஹ்ரைனின் அரசு அல்லது பொதுத்துறையில் 50,000 பேர் பணிபுரிவதாகவும், அதே நேரத்தில் 614,000 பேர் தனியார் துறையில் பணிபுரிவதாகவும் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக, தனியார் துறை பணியாளர்களில் 100,000 பஹ்ரைனிகள் மற்றும் 514,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிவதாகத் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.


பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் சில ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பஹ்ரைனில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. எனவே, நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாக துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், பஹ்ரைனில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் பஹ்ரைன் தினார்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு பரிமாற்றம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது பஹ்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% க்கும் அதிகமாகும்.


சுமார் 72% வெளிநாட்டு ஊழியர்கள் பஹ்ரைனின் தனியார் துறையில் மாதத்திற்கு 200 பஹ்ரைன் தினாருக்கும் குறைவாக பெறுவதாகவும், அவர்கள் டைப்பிங், பிளம்பிங், கட்டுமானம், ஒப்பந்தம் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 4% பேர் மாதத்திற்கு 1,000 பஹ்ரைன் தினாருக்கு மேல் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.


அத்துடன், உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ பெற்ற பஹ்ரைனியர்கள் தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளமாக 350 பஹ்ரைன் தினார் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் 450 பஹ்ரைன் தினாரையும் பெறுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி - khaleejtamil






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe