Ads Area

உணவகங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பதை தடுக்க நடவடிக்கை


நூருல் ஹுதா உமர்

சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் முக்கிய விடயங்களை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலொன்று பிரிவுத் தலைவர்களின் பங்கேற்புடன் பணிமனையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மக்கள் உணவகங்கள் பற்றிய தமது முறைப்பாடுகளை QR Code செயலி மூலம் மேற்கொள்வதற்கும் அதற்காக உடன் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான  பொறிமுறையும்  வகுக்கப்பட்டு வருவது தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும் உணவகங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்தேர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொள்வதோடு அவர்களுக்கு தமது உணவகங்களை மேம்படுத்துவதற்கும் சிறந்த சுகாதார கட்டமைப்பை நிறுவுவதற்கமான ஆலோசனைகளை வழங்கி  குடிநீரை  பருகுவதில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவு சுதந்திரத்தை வழங்குமாறும் கோரப்படவுள்ளது.

இக்கலந்தரையாடலின் போது போத்தலில் அடைக்கப்பட்ட நீர் சுகாதார கேடுகளை விளைவிக்கலாம் என்பதாலும் உணவகங்களில் வற்புறுத்தலாக போத்தல்களில் அடைக்கப்பட்ட நீர் வழங்கும் நடைமுறை காணப்படுவதாக  புகார் கிடைத்து வருவதாலும் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை வற்புறுத்தலாக வழங்குவதை தடை செய்வது என பணிப்பாளர் அவர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஒன்றரை வருட காலமாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் எந்த நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை இதனால் அதிகமான நிதியை சேமிக்க முடிந்திருப்பதுடன் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைகளும் சூழலுக்கு ஏற்படக்கூடிய டெங்கு போன்ற அதிகமான ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பு பெறும் வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கையை பிராந்தியம் முழுவதுமாக மேற்கொள்ளும் பட்சத்தில் போத்தலில்களில் அடைக்கப்பட்ட நீருக்கான செலவு வீண்விரயமாதலை குறைப்பதுடன் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை மாத்திரம் வழங்கி அதனை கொள்வனவு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதை தடை செய்வதோடு அதற்கு பகரமாக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் பாவனைக்கு உகந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு தமக்கு தேவையான குடிநீரை பெறுவதற்கான சுதந்திரம் வழங்கப்படுவதோடு சூடான நீர் தேவைப்படுமிடத்து அதற்கான வாய்ப்புக்களும்  வழங்கப்பட்டு அந்த நீரை அல்லது சுடுநீரை சுத்தமான கண்ணாடி குவளையில் வழங்க முடியும் என்று இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe