(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதாரச் சீர்கேடு இடம்பெறுவதாக அங்கு வாழும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் 18 வருங்களாக முறையான வடிகானின்மையால் சமையலறைக்கழிவு நீர், குழியலறைக்கழிவு நீர் மற்றும் மலசலகூடக்கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கி நின்று பாரியளவிலான நுளம்புகளைப்பெருக்கி டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
மக்கள் செறிந்து வாழும் இவ்வீட்டுத்திட்டத்திலும் அதனை அண்டிய குடியிருப்புகள், பாடசாலை, வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் போன்ற அரச நிறுவனங்களிலும் பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளர்கள், அரச அதிகாரிகள் எனப்பலரும் வாழ்வதால் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மாத்திரமன்றி, பருவ மழை ஏற்படுகின்ற காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீராலும் இலகுவில் நோய்த்தொற்று ஏற்பட்டு இறக்கும் அவல நிலையும் காணப்படுகின்றது.
காலத்துக்கு காலம் அரசியல்வாதிகள் பலரும் அதிகாரிகளுடன் வந்து தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்துத் தருவதாக வாக்குறுதியளித்துச் செல்கிறார்கள்.
ஆனால், நாங்கள் இவ்வாறான நெருக்கடியான வாழ்விலிருந்து மீண்டபாடில்லை எனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.