(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி சொறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அத்துடன், பிரதான வீதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாதளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
குறித்த வீதியில் அன்றாடம் செல்பவர்களை இச்சொறி நாய்கள் கடிக்க வருகின்றன. இதன் காரணமாக வீதியில் பயணம் செய்வோர் விழுந்து காயங்களுக்குள்ளாகின்றனர்.
மேலும், வீதிகளில் காணப்படும் விலங்கு எச்சக்கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இப்பகுதிகளில் சுகாதாரச்சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட நாய்கள் இரவு பகலாக கட்டாக்காலிகளாக உலாவி நகருக்குள் கழிவுகளை உண்பதற்காக வெளியிடங்களிலிருந்து உட்பிரவேசிக்கின்றன..
இப்பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு பகல் பாராது மேற்படி கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக, கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு பிரதான வீதி கல்முனை -சாய்ந்தமருது செல்லும் முக்கிய பிரதான வீதிகளில் பகல் இரவு பாராது சொறி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கூட்டம் கூட்டமாக இந்த நாய்கள் வீதிகளில் நடமாடுவதினாலும் வீதிகளில் கூட்டமாகக் கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
எனவே, இவ்விடயங்களில் உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்தி கட்டாக்காலி சொறி நாய்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி பொது மக்களை விபத்துக்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.