Ads Area

வெள்ளத்தில் மிதக்கும் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் - சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள்.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று ,   நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளம் நீர் தேங்கியுள்ளதுடன், அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இம்மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு , சம்மாந்துறை,  அக்கரைப்பற்று பகுதிகளிலுள்ள பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன், தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.


அத்துடன், அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகாலின்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.


இதே வேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயமும் வெள்ளநீரில் முழ்கும் நிலையில் உள்ளது. இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் வெள்ளநீர் தேங்கியுள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வெள்ளநீர் காரணமாக சிறுவர்கள் பாடசாலைக்குச்செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பல  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், வெள்ளநீர் தேங்கிக்காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe