Ads Area

மரணித்த மாணவனின் வீட்டுக்குச்சென்று ஆறுதல் கூறிய ஹிஸ்புல்லாஹ், மெளலானா எம்பி : சம்பவத்தை விபரித்த தாய்.



நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அரபுக்கல்லூரியில் மரணித்த மாணவனின் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், நீதிக்காக தம்மால் முன்னெடுக்கப்படும் அரசியல் பங்களிப்புக்கள் குறித்தும் தெரிவித்தனர்.


இதன்போது, தாயும் தந்தையும் தெளிவாக உறுதியாக தமது ஆதங்களைப் பகிர்ந்து கொண்டனர். எங்கள் பிள்ளை இனி வரப்போவதில்லை. ஆனால், எங்களுக்காக கிடைக்கும் நீதியானது மத்ரசாக்களில் இனி எந்த உயிரும் அநியாயமாகப் போகக்கூடாதளவு அமைவதுடன், ஏனைய சமூகத்தவர்கள் அரபுக்கல்லூரிகளை விமர்சிக்காத வகையில் நடவடிக்கை அமைய வேண்டும், நீதிக்காக எம்மோடு இன்னும் பக்கபலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கை ஆரம்பம் முதலே நீங்கள் காட்டும் அக்கறையில் தெரிகின்றது. 


தூக்கிட்டதாகக்கூறும் மலசலகூடத்தில் நாம் செல்லும் வரை தண்ணீர் வாளி நிறைந்து காணப்பட்டது. வாளியில் நீரிருக்கும் போது அவர் இவ்வாறு அதற்கு மேலேறி அவ்வளவு உயரத்தில் துணியைப்போட்டு கழுத்தில் இறுக்க முடியும். அத்தோடு, அம்மலசலகூட யன்னல் பகுதிக்குள் ஒரு பக்கத்தால் கையை விட்டு துணியைப்போட்டு மறுபக்கத்தில் எடுக்குமளவு சாத்தியமில்லை. ஆக, அவர் தூக்கிட்டு மரணித்த அம்மலசலகூடத்தில் எந்தத்தடயமுமில்லை. 


சம்பவம் நடந்த அன்றிரவு, ஒரு பிரச்சனை மத்ரஸா வாருங்கள் என 9 மணிக்கு பிறகே எனக்கு தொலைபேசி மூலம் மௌலவி அறிவித்தார். அங்கு செல்லும் வரை அவர் எமது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. எங்களது மகன் விரும்பியே அங்கு சேர்ந்தார் அவரை வற்புறுத்தி சேர்த்திருந்தால் அல்லது குழப்படியுள்ளவராக இருந்திருந்தால் பரவாயில்லை.


அத்துடன், அங்கு சென்ற எம்மைக்கண்டதும் உங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நான் என்ன செய்வது? எனப்பொறுப்பில்லாமல் கூறினார். மக்கள் அங்கு திரண்டு நின்றனr. பின்னர் நாங்கள் வைத்தியசாலை சென்று விட்டோம். எங்களுக்கு தகவல் வழங்க பல மணி நேரங்களுக்கு முன்பே அவரது சகோதரரை ஓட்டமாவடியிலிருந்து அழைத்துள்ளார்.


பொலிசாரும் நீதித்துறையும் எமக்கான நீதிக்காக இருப்பார்கள் என நம்பும் அதே வேளை, அரசியல் ரீதியாகவும் அதிகார ரீதியிலும் இவ்விடயத்தில் நீங்கள் இருப்பது எமக்கு பெரும் நம்பிக்கை என இங்கு அவர்கள் குறிப்பிட்டனர்.


குறித்த மாணவன் மரணம் தொடர்பான நீதியான சுயாதீனமான விசாரணையை தொடர்ந்தும் தாம் வலியுறுத்தி வருவதாக இங்கு  இருவராலும் தெரிவிக்கப்பட்டது..


அத்துடன், எந்தவொரு வேளையும் எம்மைத்தொடர்பு கொள்ளுமாறும் தேவையான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்கவுள்ளதாகவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe