Ads Area

எச்சரிக்கையையும் மதியாது போக்குவரத்து தடைப்படுமளவுக்கு மாவடிப்பள்ளி வெள்ளம் பார்க்க படையெடுக்கும் மக்கள்.


 (நூருல் ஹுதா உமர் )


 அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டத்தின் அதிக பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனையொட்டியதாக அம்பாறை - காரைதீவு - மாவடிப்பள்ளி வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து அபாயகரமானதாக மாறியுள்ளது. இந்த பாதைகளினூடாக மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் என்பன செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.


 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கமும், அரச திணைக்களங்களும் அறிவித்துள்ள நிலையில் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது சாய்ந்தமருது, கல்முனை, மாளிகைக்காடு, காரைதீவு, மருதமுனை, நிந்தவூர் போன்ற பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் சாரை சாரையாக குடும்பம் சகிதம் வெள்ள அனர்த்த நிலையை பார்வையிட வந்த மாவடிப்பள்ளியை நோக்கி வந்த வண்ணம் உள்ளமையால் கல்முனை- அக்கரைப்பற்று மற்றும் கல்முனை- அம்பாறை வீதிகள் வாகன நெரிசலால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதுடன் அம்புலன்ஸ் வண்டி போன்ற அவசர வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் நிலை உருவாகி உள்ளதை அவதானிக்க முடிகிறது.


 சிறுவர்கள், வயோதிபர்கள் கூட வெள்ளத்தில் இறங்கி விளையாடும் நிலை தோன்றியுள்ளதால் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் உயிர் அச்சுறுத்தல் கூட இங்கு நிலவுகிறது. மக்களின் அதிக படையெடுப்பு காரணமாக தற்காலிக வர்த்தக நிலையங்களும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது டன், காரைதீவு பிரதேச சபை மக்களுக்கான இலவச போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe