- ஏ.எச். சித்தீக் காரியப்பர்.
கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களின் கவனத்துக்கு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியிலிருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்தது.
மாட்சிமை தங்கிய நீதிமன்றின் தீர்ப்பு எதுவோ அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களும் இந்த விடயத்தில் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சரியாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். தவறின் கட்சி அழிந்து விடும்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நான் அவரைச் சந்தித்தபோது கூட இதனை அவரிடம் நேரடியாக் கூறினேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதும் முஸ்லிம்களின் பலம் வாய்ந்த ஓர் அரசியல்கட்சி. இது கடற்கரையில் சிறுவர்கள் கட்டி விளையாடும் மணல் வீடு அல்ல. அடுத்த அலையால் அழிந்து போவதற்கு.
கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சுயமாகச் சிந்தித்து ஸ்திரமாக, தொடை நடுங்காது தீர்மானங்களை எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. சுயநலத்துடன் செயற்படும் சிலரின் கதைகளைக் கேட்டு அதன் பின்னால் சென்று தீர்மானங்களை எடுத்தால் இவ்வாறான பின்னடைவுகளையும் கசப்பான அனுபவங்களையும் மேலும் சந்திக்க நேரிடும்.
கட்சியின் தீர்மானங்களை முஷாரப் மீறினார், அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டார் என்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாயின் அந்தக் காரணங்கள் சரியாகவும் மனட்சாட்சியின்படியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனை விடுத்து சந்தர்ப்பத்துக்கு தவில் வாசிக்கும் சிலரின் கதைகளுக்குப் பின்னால் சென்றால் பெரஹராவில் யானை குழம்பியதால யானைப் பாகனும் மக்களுடன் சேர்ந்தே ஓட வேண்டியது போன்ற நிலைமை உருவாகும். இந்நிலை கட்சிக்கு ஏற்படவே கூடாது.
பல ஆண்டுகள் பின்தங்கியதாகக் காணப்படும் பொத்துவிலுக்கு கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது ஊருக்கும் மக்களுக்கும் சேவையாற்றவே வேண்டும். அவர் தனது மக்களுக்குச் சேவை செய்யாவிடின் வேறு யார் செய்வது?
முஷாரப் அரசாங்கத்துக்கு ஆதராாகச் செயற்படாவிடின் நிச்சயமாக பொத்துவில் மக்களுக்கு எதனையும் செய்ய முடியாதிருந்திருக்கும். வெறும் எதிர்க்கட்சி எம்பியாக இருந்து போகும் நிலைமையே ஏற்பட்டிருக்கும். இதனால் எவருக்கும் பயன் இல்லை. மக்களின் சாபமே கிடைக்கும். அடுத்த தேர்தலில் அவரின் தோல்வி என்பதும் நிச்சயிக்கப்பட்டதாகிவிடும்.
இந்த விடயங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையோ அந்தக் கட்சியின் சில ஊதுகுழல்களோ திரிகரணசுத்தியுடன் சிந்தித்திருந்தால் இந்த நிலைமையே கட்சிக்கு நேர்ந்திருக்காது.
எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்காலத்தில் வழிநடத்தப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சியின் தலைமைத்துவத்திடமே உள்ளது.
எனவே, மாட்சிமை தங்கிய நீதிமன்றின் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கட்சியில் முஷாரப்பை மீண்டும் இணைந்து கொண்டு செயற்படுவதே சிறந்தது. அதனைக் கட்சித் தலைமை செய்யும் என நம்புகிறேன்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கூட ஒரு சில தவறுகளை இழைத்துள்ளார் என்பதும் உண்மைதான். இதனையும் நாம் ஜீரணித்தேயாக வேண்டும். இதனை முஷாரபிடம் இன்று நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். இது தொடர்பில் விரைவில் சில விடயங்களைப் பகிரங்கமாகப் பதிவிடவுள்ளேன்.