Ads Area

சம்மாந்துறை வீதியோர வியாபார அகற்றல்! பின்னனியும்; மறைந்து கிடக்கும் தவறுகளும்!!

வீதியோர வியாபாரிகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் (27) சம்மாந்துறை முழுவதுமாக இடம்பெற்றது. குறித்த விடயமானது இப்  பிரதேசத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு சிக்கல்களை, நெரிசல்களையும்  நிவர்த்திக்கும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிந்தது. 


இவ்வாறு இடம்பெற்ற வீதியோர வியாபார தளங்களை அகற்றும் நடவடிக்கையானது; சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தினால் வரையப்பட்ட 5 பக்கங்கள் கொண்ட 16 குற்றச் சாட்டுகள் அடங்கிய கடிதமொன்றை சம்மாந்துறை பிரதேச சபை உட்பட 12 நிறுவனங்களுக்கு பிரதிகள் அனுப்பியதன் பின்னர் அதிலுள்ள விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி கடந்த பெப். 20ஆம் திகதிய கூட்டத்தின் பிரகாரமே குறித்த விடயம் செயற்படுத்தப்பட்டுள்ளது. 


அக்கூட்டத்தில் வீதியோர வியாபார இடங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள், பொலிஸ், ஊரின் முச்சபைகள் உட்பட முக்கிய சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். 


குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரின் ஏகமான தீர்மானத்தின் அப்படையிலேயேதான் இச் செயற்பாடு நேற்று முனதினம் (27)  இடம்பெற்றதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும், இவ்வாறு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு தலையசைத்த ஊர் தலைமை  நிர்வாகமானது நேற்று முன்தினம் இடம்பெற்ற  வியாபார இடங்களை அகற்றும் நடவடிக்கையில் சறுக்கிச் சென்றதாக குற்றசாட்டும் கிடைத்தது. 


சரி, இவைபோக... குறிப்பிட்ட சில நாட்களாக மார்க்கத்துக்குள்ளால ஓடின 'பேஸ்புக்' வாகனம் நேற்று முன்தினமிருந்து  ஊரின் வியாபாரத்துக்குள்ளல ஓட ஆரம்பிச்சிருக்கு.


இங்குதான் நாம் வெறும் சோடா கேஸ்களாக விஸ்வரூபம் எடுக்கின்றோம். சீசனுக்கு சீசன் பேஸ்புக்ல மட்டும் அடி மனதின் கசப்புகளைக்  காட்டி உணர்வுகளை கக்கிவிட்டு, உப்புப் புளியில்லா நிலைப்பாட்டுக்குச் செல்கின்றோம். 


அதாவது, பலரது கருத்துக்களின் பிரகாரம் இந்தப் பாதை வியாபாரமானது எமதூரைப் பொறுத்தமட்டில் அத்தியவசியமாகவும், ஒரு சிலருக்கு அநாவசியமாகவும் இருக்கின்றது. இருபக்க வாதங்களிலும் நேர் மற்றும் எதிர் மறை கருத்துக்கள் உள்ளன. 


அவற்றின் பிரதிலிப்பு எவ்வாறென்பதை பார்ப்போமானால்:


வர்த்தக சம்மேளனத்தின் கவனத்திற்கு:


எமதூரில் வர்த்தக சம்மேளனமொன்று இயங்குவது வரவேற்கற்கத்தக்கது. ஆனால், இதில் வரத்தகர்கள் என்று பெயர் சொல்லுமளவுக்கு ஊரிலுள்ள பல வர்த்தக  நிறுவனங்களை உள்வாங்கி முன்னோக்கிச் செல்ல எத்தணியுங்கள். 


எனது குறிப்பிட்ட வயதுக்குள் சம்மாந்துறை பொதுச் சந்தையிலுள்ள வியாபாரிகளை ஒப்பீட்டளவில் நோக்கினால்; அங்கு சில கடைக்காரர்கள்  ஊரில் மார்கெட் ஆரம்பித்த காலத்திலிருந்து கடை வைத்துக் கொண்டு  இருக்கிறார்கள். ஆனால், இன்று வரைக்கும் கல்முனைக்குச் சென்றுதான் சில  பொருட்களை வாங்கி வந்து சில்லறையாக விற்கிறார்கள். முதலில் இந்த நிலைமையை மாற்றுங்கள் அப்போதுதான் நுகர்வோருக்குரிய  நியாய விலையை உங்களால் வழங்க முடியும். 


குறிப்பிட்ட சில பொருட்களை ஊரிலுள்ள கடைகளில் பெறுவது மிகவும் அரிதாக உள்ளமையே பலரும் வெளியூர் செல்ல காரணமாகின்றன. எனவே, எப்போதும் விற்கும் பொருள் போல எப்போதாவது விற்கும் பொருட்களையும் விற்பனைக்காக திறந்து விடுங்கள். 


அண்மைய ஊர்களில் மொத்தமாக இறக்குமதி செய்து இங்குள்ள விலையை விட ஒரு ரூபாயேனும் குறைவாக கொடுக்ககும் நிலையில் நீங்களும் அவ்வாறு செயற்பட திட்டமிடுங்கள். 


தரம் மற்றும் நம்பகத் தன்மையை ஒவ்வொரு வியாபார தளங்களும் உறுதிப்படுத்தும் வகையில் அதிரடியான திட்டங்களை வகுங்கள். 


வியாபார மாபியாக்களை மட்டும் மையமாக வைத்து செயற்படும் வியாபாரிகளுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார மூலோபாய திட்டங்களை ஊக்குவிக்கும் செயலமர்வுகள் மூலம் மார்க்க்ததையும், சமூக உணர்வுகளையும் திணித்து அதன்பால் அவர்களை வழிநடாத்துங்கள். 


பொருளின் தரத்தையும், மக்களின் தேவையையும் கருதி எல்லா வகையான தரங்களிலும் விற்பனையை மெருகூட்ட ஊக்கப்படுத்துங்கள். 


(இவைகள் Advice அல்ல; பலரிடமுமிருந்து உள்வாங்கப்பட்ட கருத்துக்கள்)


பொது மக்கள் விசனம்:


வீதியோர வியாபாரிகளிடம் உதாரணமாக ஒரு கிலோ 150 ரூபா விற்கும் வாழைப்பழத்தை தலைமுறைக்கும் சேர்த்து உழைப்பது போல் மார்கட்டுக்குள் 250 ரூபாவாக விற்பனை செய்தால் யார் உங்களை அங்கீகரிப்பர்.


உடுப்பு சரி, செருப்பு சரி எதுவாயினும் தேடுகிற பொருள் எல்லாம், விதவிதமான நவ நாகரீக பொருட்கள் ஒன்னும் உங்கிட்ட இல்லையே அப்புறம் எப்படி வாங்குவாக.


வீதியோர கட 50 ஐ மூடினால் நிரந்தர கடைகள் பத்து வச்சிக்கிட்டு (விலை) அறுக்கியலே அப்புறம் எப்படி உங்கட்ட வாங்குற.


இப்படி பல...


பொது மக்களுக்காக சிந்தனைக்கு:


நாம்மில் பெரும்பாலானோர் எமதூரில் எவ்வளவுதான் தரமான பொருள் இருந்தாலும் வாகானத்தை வெளியூருக்கு விட்டால்தான் திருப்தி என்கிற நிலைமை. 


இப்படியொரு நிலைமையில் எப்படி சம்மாந்துறை வியாபாரிகள் முன்னேறுவது. 


Ready cash business அனைத்திற்கும் வெளியூர் செல்லும் அதேநேரம்,  பெரும்பாலானோர் Credit ஐ மாத்திரம் சம்மாந்துறை   காடைகளில் எதிர்பார்த்தால் எவ்வாறு வியாபாரி உருப்படுற.


பொருளை வாங்கி மீதி காசு குறைந்தால் 'மறுகா தாரன் மச்சான்' என்றால் அது மறந்துபோயும் ஞாபகம் வராத நிலையிலுள்ள வாடிக்கையாளர்கள் அதிகமிருப்பதால் எவ்வாறு வியாபாரிகள் தன்னிறைவடைகிற.


நல்லதோ / கெட்டதோ நம்மடவனும் உழைச்சி முன்னுக்கு வரட்டுமே என்கிற ஞானம் பிறக்காத வரை எவ்வாறு வியாரிகள் முன்னேற.


ஒத்தியையும்,  குத்தகையையும் தவிர வேறு வழியில் முதலிட பயப்படும் வரை எப்படி நம்ம ஊர் வியாபாரம் விஸ்தரிக்கிற.


அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், முக்கியஸ்தர்கள், ஊர் நிர்வாகம், ஊர் பற்றாளர்கள் கவனத்திற்கு:


சம்மாந்துறையில் இத்தனை வருடங்களாக எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தும் பஸ் தரிப்பிடமொன்று தூர நோக்கோடு நிறுவப்படாமைக்கு நீங்களே பொறுப்புதாரிகள். 


ஒரு ஊரின் வியாபார மூலோபாயங்களில் முதலாவது வெளியூர் பயனாளர்கள் அதிகம் கொள்வனவு செய்ய வேண்டும். அப்போது தான் செழிப்பான நிறைவான வியாபாரத்துக்கு வழிவகுக்கும். 


மாறாக வெறும் அரசியல் இலாபங்களுக்காக சில வருடங்களுக்கு முன் வரவிருந்த பஸ் தரப்பிடத்தைக் கூட உயிருடனிருந்தும் காலஞ்சென்ற முன்னாள் எம்.பி.க்கள் இருவரும் அவர்கேளாடு சேர்ந்து அரசியல் செய்த சில கட்சி  அமைப்பாளர்களும், Brokerகளும் சேர்ந்து  மட்டமாக்கி மார்பு தட்டிச் சென்று விட்டார்கள். இவ்வாறு 'தண்ணிக்கும் தவிட்டுக்கும்' இழுத்தடிக்கிற தலைவர்கள் இருந்த வரை எப்படி ஊரின் அபிவிருத்தியும், வியாபாரமும் முன்னோக்கிச் செல்லும். 


அரசியல் மற்றும் நிர்வாக கெடுபிடிகளால் ஆள்மாறி ஆள் பந்தாட்டமும், திண்டாட்டமும் செய்தோமானால்  வீதியோர வியாபாரிக்கு கொண்டாட்டம் தான். 


அனைவரின் சிந்தனைக்கு:


விதியோர வியாபாரம் தேவைதான் நிகாரிக்கவில்லை. ஆனால், இவ்வாறு வீதிகளில் நின்று வியாபாரம் செய்பவர்கள் நடமாடும் வியாபாரிகள் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.


அவர்கள் ஒரு இடத்தில் நின்று எரிபொருளை சிக்கனப்படுத்துகிறார்கள். ஆனால், நாம் விலையின் நிலை தெரியாமல் 'அம்புர்ர' இடமெல்லாம் ஐஞ்சி பத்து கூட குடுத்தும் வாங்குறம். இதன் சுழற்சி வியாரிக்குத்தான் இலாபம். நுகர்வோருக்கல்ல. இந்த மாபியா மறைமுகமான வியாபார நசுக்குதல் உத்தி தெளிவாக சிந்தித்தால் புரியும்.


ஊத்தயோ, சூத்தயோ கொட்டி ஒரு மணி நேரத்துல விற்று முடிச்சிட்டு அவன்  போய்விடுறான். அடுத்த நாள்தான் அவிஞ்சதும், பழுதானதும் விளங்கும் அவன எங்க தேடுற.


(இதனை அனுபவித்த பலரும் இருப்பீர்கள்)


இப்படி எவ்வளவோ இருக்கு...


எனவே, இந்த வியாபர விடயத்தில் அனைவரும் சரி செய்ய வேண்டிய நிறைய பக்கங்கள் உள்ளன. 


ஆகையால், இப்படியொரு செயற்பாடு  நடந்துள்ளதென்றால் அதன் மாற்று விளைவை பொறுந்திருந்ததுதான் பார்க்க வேண்டும். 


சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட போது, 


அவர்களுடைய கருத்து என்னவென்றால்; ஆங்காங்கே வீதியோர வியாபாரத்தை மேற்கொள்ளாமல் ஒரு ஒழுங்குபடுத்தலினடாக செய்ய வேண்டும் என்கிறார்கள். 


அதற்கு சம்மாந்துறையை பொறுத்த வரையில் பல இடங்கள் உள்ளன. வளங்கள் உள்ளன. 


அவ்வாறான நடைமுறையை மேம்படுத்தும் வகையில் உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் ஒப்படையுங்கள். 


அல்லது 


அதை விடுத்து முகநூலில் தம்பட்டம் அடியாது; ஊர் பற்றாளர்களாக இருக்கிறீராகள் என்றால் அநியாயமான விலைகள் விற்கப்படும் கடைகள், அளவை நிறுவையில் மோசடி செய்யும் வியாபாரிகளை பகிரங்கப்படுத்துங்கள் (அது உங்கள் உறவினரானாலும் சரியே). 


அப்படி இரண்டு நிறுவனங்களுக்கு நடந்தால் அனைத்து நிறுவனங்களும்  தானாக Control நிலைக்கு வந்துவிடும். 


இதற்கு தன்னிறைவு கண்ட ஒவ்வொரு ஊர் பஸார்களும் சான்று!


எனவே, இந்தப் பதிவு யாரையும் மையப்படுத்தியோ அல்லது யாருக்கும் சார்பாகவோ எழுதப்படவில்லை. 


ஒரு நுகர்வோனாகவும் மற்றும் எனது சிறு வயதில் சொந்தமாக இந்த ஊரில் 'மொபைல் சொப்' செய்த அனுபவத்திலும் வரைந்துள்ள கருத்து!!


இதில் குறை நிறைகள் இருப்பின் என்னிடம் தெளிவாக கூறலாம்.


நன்றி!!!


✍️ கியாஸ் ஏ. புஹாரி




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe