தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு புனிதத் தளங்களான மக்கா மற்றும் மதீனாவில் பள்ளிவாசல்களில் திருமண நிகழ்வுகள் செய்து கொள்ள சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
மக்கா பள்ளிவாசல் மற்றும் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) பள்ளிவாசல்களில் திருமணங்களை நடாத்திக் கொள்ள வேண்டுமானால் திருமண நிகழ்வுகளை நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் எனவும், பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்கு தொந்தரவு செய்யாத வகையிலும், கூச்சலிடாமல் அமைதியான முறையில் திருமண நிகழ்வுகள் நடாத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சில விதிமுறைகளையும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முஸயத் அல் ஜாப்ரி என்ற சவூதி மசூன் அல்லது திருமண அதிகாரி, பள்ளிவாசல்களில் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் முகமது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல்களில் திருமண நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே சவுதி அரேபியாவில் உள்ள இரு புனிதத் தளங்களுக்கு வருகை தரும் யாத்திரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ஜாப்ரி கூறியுள்ளார்.
மேலும் அல் ஜப்ரியின் கூறுகையில், மதீனாவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே பொதுவாக மதினாவில் உள்ள நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பள்ளிவாசலில் திருமண ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.